மாதம்பயை அச்சுறுத்திய முதலை, பலமணி நேரப் போராட்டத்தின் பின் பிடிக்கப்பட்டது
(முஹம்மட் ரிபாக்)
மாதம்பை கல்முருவ பகுதியில் பொதுமக்களுக்கும் மிருகங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை ஒன்றை பிடித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் புத்தளம் சிராம்பியடிய பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார் 14 அடி நீளமான முதலையே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த முதலை, மாதம்பை கல்முருவ முங்கேன குளப்பகுதியில் மிக நீண்ட காலமாக காணப்பட்டதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்குள் குறித்த முதலை காணப்படுவதாக பிரதேச மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சிராம்பியடிய பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த பிரதேசத்துக்குச் சென்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பல மணி நேரப் போராட்டத்தின் பின்னர் குறித்த முதலையை உயிருடன் பிடித்துள்ளனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த முதலையை வில்பத்து வனத்தில் கொண்டு விடவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment