அமெரிக்க, இந்திய, பிரித்தானிய உதவியுடன் மத்திய வங்கிக்கு பாதுகாப்பு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிபுணர்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகளைக் கண்டுபிடிக்கவும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை கண்டறியவும் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிபுணத்துவ உதவிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிணைமுறி மோசடி மூலம் பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தினால் ஈட்டப்பட்ட நிதியை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை அவர்களால் மீளப் பெற முடியாது.
இந்த நிதியை மீளப் பெறுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சிவில் மீட்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment