இந்த “நூற்றாண்டின் கன்னத்தில் விட்ட அறை”
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு அமைதி முயற்சி இந்த “நூற்றாண்டின் கன்னத்தில் விட்ட அறை” என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வர்ணித்துள்ளார்.
பலஸ்தீன தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய அப்பாஸ், ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் எந்த ஒரு அமைதி திட்டத்தையும் ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
ஒஸ்லோ உடன்படிக்கைக்கு இஸ்ரேல் முடிவுகட்டி இருப்பதாகவும் அப்பாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒஸ்லோ அமைதிச் செயற்பாடு 1995 இல் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
எனினும் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்தால் பலஸ்தீனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்துவது குறித்து டிரம்ப் எச்சரித்துள்ளார். இம்மாத ஆரம்பித்தில் உரையாற்றிய டிரம்ப், புதிய அமைதிப் பேச்சுவார்த்தையில் ஜெரூசலத்தின் அங்கீகாரம் தீர்க்கமான ஒன்றாக இருக்கும் என்று வலியுறுத்தி இருந்தார்.
எனினும் அமெரிக்காவின் இந்த நகர்வு அது நடுநிலையான மத்தியஸ்தராக இருக்க முடியாது என்பதை காட்டுகிறது என்று பலஸ்தீனம் வாதிடுகிறது.
டிரம்பின் நடவடிக்கைக்கு பலஸ்தீனர்கள் உறுதியான பதில் ஒன்றை அளிக்கும் முயற்சியாகவே பலஸ்தீன தலைவர்கள் ரமல்லாஹ்வில் இரு தினங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் ஜெரூசலம் தொடர்பான அங்கீகாரத்தை ஐ.நா பொதுச் சபை நிராகரித்த நிலையில் டிரம்பின் பரிந்துரையை அப்பாஸ் ஏற்கனவே நிராகரித்தார்.
ரமல்லாவில் இயங்கும் பலஸ்தீன தலைவர்களிடம் கடந்த ஞாயிறன்று உரையாற்றிய அப்பாஸ், “இந்த நூற்றாண்டின் உடன்படிக்கையின் கன்னத்தில் விட்ட அறையாக இது உள்ளது. இதனை நாம் ஏற்கப்போவதில்லை. நான் ஒஸ்லோவை பற்றி குறிப்பிட்டேன், தற்போது ஒஸ்லோ ஒன்று இல்லை. இஸ்ரேல் ஒஸ்லோவுக்கு முடிவுகட்டி விட்டது” என்று குறிப்பிட்டார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு புதிய அமைதி திட்டம் ஒன்று பற்றி அமெரிக்கா கடந்த பல மாதங்களாக கூறி வருகிறது. எனினும் அது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஜெரூசலத்திற்கு வெளியில் உள்ள அபூ டிஸ் கிராமத்தை பலஸ்தீன தலைநகராக ஏற்கும் பரிந்துரை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கும் விபரத்தை அப்பாஸ் வெளியிட்டார்.
ஜெரூசலம் முழுவது தமது தலைநகர் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. எனினும் 1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெரூசலம் தமது எதிர்கால தலைநகர் என்று பலஸ்தீனம் கூறி வருகிறது.
Post a Comment