Header Ads



பிரதி அமைச்சருக்கு, சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் - ஹக்கீம்

1250 கோடி ரூபா செலவில் ஓட்டமாவடி - வாழைச்சேனை பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலுக்கிடையில் இத்திட்டம் முடிவடையும் வகையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோப்பையிலா இங்கு தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட இங்குள்ள பிரதி அமைச்சருக்கு நாங்கள் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஒட்டகச் சின்னத்தில் (சுயேட்சைக் குழுவில்)  போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (13) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்‌றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

ஓட்டமாவடி பிரதான வீதியை இருமருங்கிலும் விஸ்தரித்து மின்விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தும் வேலையை நாங்கள் செய்துதருவோம். மீராவோடை பிரதேசத்திலும் ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு மதில் அமைக்கும் வேலையையும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். தூய குடிநீருக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 350 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஓட்டமாவடியிலும், வாழைச்சேனையிலும் செப்பனிடப்படாத குறுக்கு வீதிகளை நாங்கள் புனரமைத்து தருவோம். 

மாஞ்சோலை, பதுரியா பிரதேசத்தில் அடாத்தாக எல்லை மதில் கட்டப்பட்டுக்கொண்டிக்கிறது. இது கோரைளைப்பற்று மேற்கில் மிகவும் பின்தங்கிய பிரதேசம். வறுமைக்கோட்டுக்கு கீழாக இங்கு ஏராளமாக குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு தனியான தொழிற்சாலைகளை அமைத்து அவர்களின் வருமானத்துக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாத ஒரு பிரதியமைச்சர் இங்கு இருந்துகொண்டிருக்கிறார். 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் தந்தால், மீராவோடை பிரதேசத்தில் சந்தை கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்கும் பணியை நான் முன்னின்று செய்துதருவேன். மீராவோடை சந்தியை வியாபார மத்திய நிலையமாக மாற்றுகின்ற தீர்மானத்தை வைத்துக்கொண்டுதான், அதிகாரத்தை எங்களது கைகளில் தந்துபாருங்கள் செய்துகாட்டுகிறோம் என்று கேட்கிறோம்.

நிறைய செலவுசெய்து நான் கொங்கிறீட் பாதைகளை இங்கு போட்டிருக்கிறேன். ஆற்றங்கரை பக்கமாகவுள்ள தனது சொந்தக் காணிகளை பாதுகாப்பதற்காக பிரதி அமைச்சர் மதில்களை அமைத்து இடையிடையே விட்டிருக்கிறார். ஏழை மக்களின் வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் இந்த மதில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சியிருக்கும் மதிலை அமைத்துதரும் பணியை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்கிறது.

ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திலும் இதேமாதிரியான நிலைமை காணப்படுகிறது. ஆற்றங்கரையை அண்டிய மக்கள் குடியிருப்புகளை அரிப்புக்குள்ளாகி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டம் அதிகரிக்கின்றபோது, முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துகொள்ளும் அபாயமும் காணப்படுகிறது. இங்கு பாதுகாப்பு மதிலை அமைத்து, மக்களை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துதரும்.


நாவலடி தியாவட்டுவான் வட்டாரத்துக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் என்னிடம் அழுதுபுலம்பினார்கள். அறக்கட்டளை என்ற பெயரில் அப்பாவி மக்களின் காணிகளை தனக்காக அடாத்தாக பிடித்துவைத்திருக்கிறார். இந்த அநியாகத்தை பார்த்துக்கொண்டு இனியும் இவர்களின் கைகளில் அரச அதிகாரங்களை கொடுக்கலாமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். 

முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் என்பதற்காக, அவர்களது பேர்மிட் காணிகளின் உறுதிப்பத்திரங்களை ரத்துச்செய்வதற்காக சில பிரதேச செயலாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார். வாகரை பிரதேச செயலாளர் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணச் சென்றால் பல பழிவாங்கல்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு சோரம்போய், அப்பாவி மக்களை பழிவாங்கும் அரச அதிகாரிகளை நியாயத்துக்கு பயந்துகொள்ள வேண்டும்.

அசல் காணி உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் இருக்கின்றபோது, அதன் பிரதிகணை காணி அமைச்சுகளிலிருந்து அகற்றிவிட்டு லாவகமாக மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்துக்கொள்கின்றனர். பழிவாங்குவது ஒருபுறம், மக்களது காணிகளை பறிமுதல் செய்வது மறுபுறம் என்று நடக்கிற இந்த அநியாயத்துக்கு நாங்கள் முடிவுகட்டவேண்டும். இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த மாற்றத்துக்காக சிந்திக்கும் காலமாக இதை மாற்றிக்கொள்ளவேண்டும். 

காவத்தமுனையில் பல வருடங்களாக பாழடைந்த சொத்தாக கடதாசி ஆலை காணப்படுகிறது. மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும்வகையில் அதை புனரமைப்பதற்கு பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றிலுள்ள இரும்பை கழற்றி விற்பதற்கு சிலர் திட்டம்போட்டுக்கொண்டிருக்கி றார்கள். இரும்பும், செம்பும் விற்றுப் பழகியவர்களிடம் இந்த கடதாசி ஆலை அக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

செம்பை உள்ளூர் உற்பத்திக்கு வழங்குவதினால், நேரடியாக அதனை ஏற்றுமதி செய்யமுடியாது. ஆனால், வர்த்த அமைச்சினூடாக செம்பை உருக்கி ஆமை செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தனர். இதனால், உள்ளூர் உற்பத்தியார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அமைச்சரவையில் சண்டைபிடித்து இந்த சட்டவிரோத செம்பு ஏற்றுமதியை நான் தடைசெய்தேன்.

இதுபோல, இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப்பாக்குளை இலங்கை இறக்குமதி செய்து அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். வரிச்சலுகைக்காக இப்படியான வேலைகளை செய்து அது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இப்படியாக சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணம்தான் இந்த தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு பொதிகள் வழங்குகின்ற பின்னணியில் இப்படியான ஊழல்தான் மறைந்திருக்கிறது என்‌றார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா, முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் எச்.எம்.எம். றியால், கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.