Header Ads



இப்படியும் ஒரு பெண்


ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்காக திருமண வாழ்க்கையையே மதுரை பெண்மணி ஒருவர் தியாகம் செய்துள்ளார்.

படிப்பு, எதிர்கால லட்சியம், குடும்ப பொறுப்பு உள்ளிட்டவைகளுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்க்கை வாழ்வோர் ஒரு சிலர் உண்டு. ஆனால் திருமணம் நடந்தால் தான் ஆசையாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையை சரிவர பராமரிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளாமல் வீர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், ஒரு பெண்மணி. வீரத்துக்கு பெயர் போன மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியை சேர்ந்த செல்வராணி (வயது 48) தான் அவர்.

காளை வளர்ப்பே பெருமையாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் செல்வராணி. இவரது முந்தைய தலைமுறையினர் காளை வளர்ப்பதை ஒரு கடமையாக எண்ணி செய்திருக்கின்றனர். இவரது சகோதரர்கள் குடும்ப பொறுப்புகளில் பிசியாகிவிட, தன் வீட்டு பெருமை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் பாசமிகு காளை ராமுவை பத்திரமாக பராமரித்து வருகிறார், செல்வராணி.

குடும்பத்தின் ஒரே பெண்ணாக இருந்தபோதும் ‘காளை வளர்ப்பு’ மீது கொண்ட அதீத பிரியத்தால் ‘திருமணம் வேண்டாம்’ என்று செல்வராணி முடிவு செய்ததற்காக, தற்போது வரை ஏராளமான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ஆனால் தனது முடிவு தவறு என்று எண்ணியதோ, அந்த முடிவுக்காக வருத்தப்பட்டதோ கிடையாது.

சிரமங்கள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து பிரச்சினைகளையும் தனது மனத்திடத்துடன் கையாண்டு, காளை ராமுவை குழந்தையை போல வளர்த்து வருகிறார், செல்வராணி.

இதுகுறித்து செல்வராணி கூறியதாவது:-

என் தாத்தா முத்துசாமியும், அப்பா கனகராசுவும் காளையை நல்லபடியாக வளர்த்தார்கள். ஆனால் உடன்பிறந்தவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்வதே அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. என் குடும்பத்துக்கு காளை வளர்க்கும் குடும்பம் என்ற தனி அடையாளமே இருந்தது.

என் உடன்பிறந்தவர்களை போல நானும் திருமணம் செய்துகொண்டு இன்னொரு வீட்டுக்கு போய்விட்டால், என் வீட்டு பெருமை முடிவுக்கு வந்துவிடும் என்று யோசித்தேன். ‘திருமணம் வேண்டாம்’, என்று முடிவு எடுத்தேன். பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் எனது வாழ்க்கைக்கான தேவைகளை குறைத்துக்கொண்டு என் செல்ல குழந்தையை (காளை ராமு) வளர்த்து வருகிறேன். ராமுவை சரியாக வளர்க்க முடியாது என்பதால் வெளிவேலைகளுக்கு செல்வதில்லை. அருகில் உள்ள வயல்களில் கூலி வேலைக்கு செல்வேன். அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு 18 வருடங்களாக ராமுவை வளர்த்து வருகிறேன். அவ்வப்போது உறவினர்களும் உதவுகிறார்கள்.

காளையை வளர்ப்பதும் குழந்தையை வளர்ப்பதற்கு சமம். காலையில் தண்ணீர், வைக்கோல் கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடல்நலனில் அக்கறை காட்டுவது, செவ்வாய்-வெள்ளி கிழமைகளில் பூஜை செய்வது என அனைத்தையும் ரசித்து செய்துவருகிறேன். சிறு புண் கூட ராமுவுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்.

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பங்கேற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் ‘அடக்க முடியாத காளை’யாக ராமு வலம் வருகிறான். என் வீட்டில் உள்ள தங்க காசு, வீட்டு உபயோக பொருட்கள், பட்டுச்சேலை என அனைத்துமே ராமு வெற்றிபெற்றதால் பரிசாக கிடைத்தவை. ஒரு மகனாக எனக்கு இந்த உதவிகளை ராமு செய்கிறான். அவனால் என் வீட்டுக்கும், என் கிராமத்துக்கும் பெருமை. பரிசு எனது நோக்கம் அல்ல, வீரியமாக காளையாக ராமு இருக்கவேண்டும் என்பது தான்.

ஜல்லிக்கட்டி போட்டியில் ராமு பங்கேற்பது முதல் போட்டி முடியும் வரை ராமுவுக்காக நான் விரதம் இருப்பேன். இதுவரை எந்த விதிமுறைகளையும் மீறி எனது காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைத்தது கிடையாது. தொடர் வெற்றிகளை பெறுவதால் ராமுவை லட்சக்கணக்கில் விலைபேசி சிலர் வீடு தேடி வந்தார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.

எங்கள் வீட்டின் செல்வமாக, குழந்தையாக, கடவுளாக ராமுவை வளர்த்து வருகிறோம். குடும்பத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் கூட ராமுவை பார்க்க நாங்கள் அனுமதிப்பது கிடையாது. போதை ஆசாமிகள் அருகில் வந்தாலே அவர்களை ராமு முட்டித்தள்ளுவான். என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும், தொடர் வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே என் வாழ்வின் ஒரே சிந்தனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

Powered by Blogger.