சிறிலங்கா பற்றி அறிக்கை தயாரிக்கும் றோவின் முன்னாள் தலைவர், பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்
இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு முகவரமைப்பான றோவின் முன்னாள் தலைவரான ரஜிந்தர் கன்னா, நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, இந்திய வெளிவிவகாரச் சேவையின் முன்னாள் அதிகாரி அரவிந்த் குப்தா கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பின்னர், வெற்றிடமாக இருந்த இந்தப் பதவிக்கே, ரஜிந்தர் கன்னா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜிந்தர் கன்னா, 1978ஆம் ஆண்டு றோவில் இணைந்து கொண்டார். பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இவரது கண்காணிப்பில் பல தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் இவரை பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு முடிவு செய்துள்ளது. எனினும் இவரது பணிக்காலம் அறிவிக்கப்படவில்லை.
ரஜிந்தர் கன்னா தற்போது, தேசிய பாதுகாப்புச் சபை செயலகத்தின், அயல்நாடுகள் கற்கைகள் பிரிவில் சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அவரது தலைமையின் கீழேயே, சிறிலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான, கொள்கை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், புலனாய்வு அமைப்புகளின் தலைவர் பதவியில் இருந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
Post a Comment