முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை, ஆதரிக்காதீர்கள் என ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுள்ளேன்
சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
அரசியலமைப்பு தொடர்பான மும்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது குறித்து கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடி ஆராய்ந்தது. அப்போது, அரசியலமைப்பு மும்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த ஜனாதிபதி முறை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கக் கூடாது என நான் எமது கட்சிக் கூட்டத்தில் தெளிவாக கூறினேன். அது தொடர்பில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் செய்து இறுதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்று கட்சித் தீர்மானித்தது. அதற்கமை நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.
நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், எமக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும். காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆட்சியமைக்கும் போது அது எமக்கு தேசிய ரீதியில் பல நன்மைகளைப் பெற்றுத்தரும். தேசிய ரீதியில் அது பேசுபொருளாக மாறும்.
காத்தான்குடியில் இருக்கின்ற 10 வட்டாரங்களையும் மிகப்பெரும் பலத்துடன் நாங்கள் வெற்றி கொள்வோம். உறுதியான நிர்வாகத்தை, பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் நாளுக்கு நாள் எமது செல்வாக்கு – ஆதரவு அதிகரித்து வருகின்றது. 1989-90ஆம் ஆண்டுகளில் என்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இடைநடுவில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள எம்மை விட்டு பிரிந்து சென்றனர். அவர்கள் எம்முடன் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர். அதேபோன்று, கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் எனக்கு எதிராக நின்றவர்கள் இப்போது என்னுடன் கைக்கோர்த்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள பல சகோதரர்கள் எனது அரசியல் போக்கை பாராட்டி எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாங்கள் கடந்த 25 வருடங்களாக செய்த அரசியல் போக்கை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும், காத்தான்குடி பிரதேசத்திலும் புதிய யுகமொன்றை, புதிய நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கான முழு திட்டத்தையும் வகுத்துள்ளோம்.
அதற்கான தயார் படுத்தல்களையே நாங்கள் இந்தத் தேர்தலில் முன்னெடுக்கின்றோம். எமது தேர்தல் மேடைகள் மற்றைய கட்சிக்காரர்களை விமர்சிக்காது மக்களின் தேவைகளை பேசுகின்ற, ஊரின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுகின்ற களமாகவே பயன்படுத்துகின்றோம். நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அரசியல் கலாசாரம் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றவர்களே எம்மை பாராட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்தான்குடிக்கு வருகைத் தரவுள்ளார். பி.ப. 4 மணிக்கு பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என நம்புகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவ்வாறான நிலையில் அவர் காத்தான்குடிக்கு வந்த போது அவரது கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்தனர். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் காரில் செல்லும் போது அவர் தனக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என்ற உணர்வையே மறந்து என்னுடன் பல விடயங்களை கூறினார். அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் தொடர்பில் அவர் வைத்துள்ள தப்பான அபிப்பிராயத்தை குறித்த காத்தான்குடி கூட்டம் இல்லாமல் ஆக்கியிருக்கும். – என்றார்.
My3 will listen to Hisbullah or Hisbullah will listen to My3?
ReplyDelete