Header Ads



செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற, முக்கிய தேர்தல் இது - ஹக்கீம்

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதியதொரு முறையில் நடைபெறுகின்ற தேர்தலாகும். ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாகவும் இத்தேர்தல் அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் இக்கட்சி எவ்வளவு செல்வாக்குப் பெற்று நிற்கின்றது என்பதை கணிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தேர்தல் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். நாங்கள் அரசாங்கத்திலே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வது இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதில் எங்களுக்குள் இருந்த தீவிரம், அதில் காட்டிய ஈடுபாடு, அதனூடாக மக்கள் மத்தியில் எமது கட்சி செயற்பாட்டாளர்கள் காட்டிய அக்கறை என்பன இந்தக் கட்சிக்கு புதியதொரு உற்சாகத்தை தந்துள்ளது.

நியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அதனை நாங்கள் வாய்ப்பாக மாற்றியுள்ளோம். அதற்காக மாற்று உபாயங்களை கையாண்டுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பல வகைகளில், வித்தியாசமாக நான்கு கட்சிகளில் போட்டியிடுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகக்கூடிய அதிகார மையமாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை எமது கட்சி தன்னுடைய பட்டியலாக மாற்றியுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.

குருணாகல் மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி சபைகளிலும், திக்குவல்லை நகர சபையிலும், ஹம்பாந்தோட்டை மாநகர சபையிலும் மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் பட்டியலில் முதன்முறையாக எல்லோரும் மலே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள இன்னும் இரண்டு கட்சிகளுடாகவும் போட்டியிடுகின்றோம். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியில், ஜனாதிபதியின் இடமான லங்காபுர பிரதேசத்தில் போட்டியிடுவதுடன் அந்த சபையில் 3 ஆசனங்களை வெல்லக்கூடிய சந்தர்ப்பமும் எமக்கு உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருநுவர ஆகிய சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஏனைய முஸ்லிம் பெரும்பான்மை சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றோம். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மயில் சின்னம் என்பன போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகின்றது. இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலான சபைகளை வெற்றிகொள்ளும் நிலைமையை அங்கு உருவாக்கியுள்ளோம்.

அதேபோல் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் நகர சபை, கல்பிட்டி பிரதேசசபை என்பவற்றில் தனித்தும் போட்டியிடுகிறோம். புத்தளம் பிரதேச சபையிலும், வண்ணாத்திவில்லு பிரதேச சபையிலும்எங்களுடைய ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலவரம் காணப்படுகின்றன.

வன்னி மாவட்டத்தில் நாம் தனித்துக் கேட்கின்றோம். அக்கரைப்பற்று நகர சபையில் போட்டியிடுகின்றோம். அங்கு இதுவரையிருந்த நிலைமையை விட உன்னதமான ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இப்படியாக பல இடங்களில் கட்சியுடைய அரசியல் ஒரு உசார்நிலைக்கு வந்து, இந்த தேர்தலில் நாங்கள் ஒரு பலமான கட்சி என்பதை நிரூபிக்கும் தருணம் வந்துள்ளது.

இந்த தேர்தல் முறை சம்பந்தமாக எல்லோரும் புடம்போட்டுப் பார்க்கின்ற முதலாவது கலப்புத் தேர்தல். இதனை பெரிய கட்சிகளே கொண்டுவந்தன. ஆனால், சமூகத்தின் பிரதிநிதித்துவம் பறிபோகக்கூடாது என்று சிந்திக்கின்றவர்கள், சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தங்களது சமூகப் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவே பயன்படுத்துவார்கள்.

இந்த வட்டார தேர்தலில் எங்களுடைய சமூக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலும் நாம் செயற்பட்டால், எமக்கான சபைகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments

Powered by Blogger.