Header Ads



வடக்கு – கிழக்கு இணைய, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - விக்னேஸ்வரன்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை, வடக்கு மாகாண முதலமைச்சர்  நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் வாழ்வாதார நகர்வுகளை கையாள்வது தொடர்பாக, இந்தியத் தூதுவருக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் பேச்சுக்கள் இடம்பெற்றது.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இந்திய மத்திய அரசாங்கத்தின் இணக்கப்பாடுகள் குறித்து ஆராய்வதாக முதலமைச்சரிடம் இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,

“இந்திய அரசாங்கத்துடன் வடமாகாண சபை சார்பில் நாம் ஏற்கனவே நீண்டகால பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இதில் ஒரு கட்டமாகவே நான் இந்தியத் தூதுவரை  சந்தித்து பேச்சு நடத்தினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான இருநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது குறித்து வினவினேன்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திகள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்துள்ளோம். ஆகவே அவற்றை கையாள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் தூத்துக்குடி- -தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த நகர்வுகள் குறித்து பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வடமாகாணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து ஆரம்பத்தில் இருந்து கலந்துரையாடப்பட்டு வந்த நிலையில் எவ்வாறான வீடுகள் அமைப்பது என்பது குறித்த சில சிக்கலான நிலைமைகள் காணப்பட்டன.

இப்போது அவை குறித்து ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேசியிருந்தோம். வீடுகளை அமைப்பது குறித்த அவர்களின் தீர்மானத்தை விரைவில் தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் நகர மண்டப புனரமைப்புகளுக்காக 800 மில்லியன் ரூபா நிதியை இந்தியாவிடம் கோரியிருந்தோம். அது குறித்தும்,  மயிலிட்டி மீன்பிடி துறைமுக புனரமைப்பு தொடர்பாகவும், இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலும் அதனூடாக தமிழ் மக்களுக்கான பாதுகாப்புகள் குறித்தும் நாம் இதன்போது பேசியிருந்தோம். வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் ஆழமான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன்  வடக்கின் நகர்வுகள் குறித்து மத்திய அரசாங்கத்தின் அனுமதிகள் மற்றும் ஒத்துழைப்பும் அவசியம். ஆகவே இவை குறித்து பேசுவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நாம் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுகளை முன்னெடுப்போம் ” எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Ayyo...Ayyo Vetkaa illai..
    Modi idam poi pichei ketkalame....!!!

    ReplyDelete
  2. புருஷன புடிக்கல்லேண்டு சொல்லி பொண்டாட்டி கோவிச்சிட்டு போயிட்டாம்.
    பொண்டாட்டிய சமாதானப்படுத்த வக்கில்லாத புருஷன் போய் பக்கத்துக்கு வீட்டுக்காரனை கூப்பிட்டிச்சாம் ஏன்ட பொண்டாட்டிய என்னோட சேர்த்து வெய் எண்டு சொல்லி.

    இதெல்லாம் ஒரு பொழப்பு.
    தூஊஊ

    ReplyDelete

Powered by Blogger.