முஸ்லிம் சமூகம், எழுந்து நிற்க வேண்டுமாக இருந்தால்...!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் காத்தான்குடி குட்வின் சந்தியில் நேற்று இரவு இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
17 வருடங்கள் எல்லோரும் பிழை விட்டதன் காரணமாக தலைவர் அஸ்ரப்பின் மறைவுக்கு பின் எந்தவித அறுவடையும் சமூகத்திலும், தேசியத்திலும் எடுத்துக் கொள்ளவில்லை.
வடக்கு கிழக்கு அப்பால் உள்ள முஸ்லிம் சமூகத்தின் துயரங்களை துடைப்பதற்கு ஒரு சந்தரப்பத்தை பெற்றுத் தராமல் போயுள்ள நிகழ்வு ஏற்பட்டது என்றால் நாங்கள் அந்த நாட்களில் கட்சியை குர்ஆனாக நினைத்த காரணம் தான்.
நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை பிழையாக சொல்லவில்லை. கட்சி நல்ல கட்சி. ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இதனை மாற்ற வேண்டும் என்று எல்லா தலைவர்களும் முயற்சித்தார்கள். அக்கட்சியில் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வெளியேற்றப்படுகின்ற பொழுது துரோகி என்ற பட்டத்தோடு செல்கின்றார்கள்.
ஆனால் வெளியேறியவர்கள் யாரும் சோர்ந்து போய் விடவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்கிவிடவில்லை. சமூகம் அவர்களை ஒதுக்கிவிடவில்லை என்பதை மக்கள் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஒருமித்த குரலாக என்றும் திகழ்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் என்பதை யாரும் மறந்து விட முடியாது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளில் முதலில் வந்து நிற்பவர் அவர் மாத்திரமே.
நாங்கள் காணி ரீதியான பிரச்சனை, கல்வி ரீதியான பிரச்சனைகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றவர்கள். யார் அதிகாரம் தருவார்கள், யார் அங்கீகாரம் தரமாட்டார்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது.
முஸ்லிம் சமூகம் எழுந்து நிற்க வேண்டுமாக இருந்தால், இரண்டு துறைகளில் சிந்திக்க வேண்டும் என்று கண்டோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி ரீதியாக மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசியல் இலக்கு இருந்தது.
நாங்கள் இழந்து இருக்கும் காணிகளை எந்த சந்து பொந்துகளில் இருந்தாவது எங்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப இல்லை என்று சொன்னாலும் ஒருமித்த கணக்கிற்கு எங்களுடைய காணிகள் மாவட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் எங்களுக்கு சேர வேண்டிய காணிகளையாவது முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையோடு பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.
வடக்கு கிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்கள் ஆணை வழங்கினால் மாத்திரம் தான் வடக்கிழக்கிற்கு அப்பால் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினூடாக வழங்க வேண்டுமாக இருந்தால் இதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.
Post a Comment