Header Ads



ஆமைகள், பெண்ணாக மாறிய அதிர்ச்சி

-ர.சீனிவாசன்-

அதன் பிஞ்சுக் கால்கள் முதன் முதலாகக் கடல் மணலில் பட்டவுடன், தண்ணீரோ என்றுதான் நினைத்தன. நீந்துவது போல பாவித்து தட்டுத் தடுமாறி பத்தடி தூரத்தில் இருக்கும் கடல் நீரைத் தொட்டன. வேகமாகக் கடலில் இறங்கி, பின் சிறிது நேரத்தில் கண்களிலிருந்து மறைந்து போயின. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பின் (The Great Barrier Reef) வெளிப்புற விளிம்பில் இருக்கும் சிறிய தீவுகளில் ஒன்று ரைன் தீவு (Raine Island). அதன் கடற்கரையில் நிகழ்ந்ததுதான் இந்தப் புதிதாகப் பிறந்த கடல் ஆமைகளின் முதல் நடை. சோகம் என்னவென்றால், பிறந்த ஆமைகளில் 99.8% பெண் ஆமைகள். ஒரே ஒரு பாலினம் மட்டும் இருந்தால், எப்படி இனப்பெருக்கம் நிகழும்? இனமே அழிந்து விடாதா? சரி, இப்படி நிகழ யார் காரணம்? வேறு யார்? நாம்தான்!

பெண் ஆமைகள் அதிகம் பிறக்கக் காரணம்

கரன்ட் பயாலஜி (Current Biology) என்னும் பத்திரிகை பச்சைக் கடல் ஆமைகள் குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் ரைன் தீவில் இவ்வாறு 99.8% பெண் ஆமைகளாகப் பிறந்தது ஏன் என்று அலசியுள்ளனர். இதில் முக்கியக் காரணமாக முன் வைக்கப்பட்ட ஒன்று புவி வெப்பமயமாதல். கொதித்துக் கொண்டிருக்கும் வடக்கு ஆஸ்திரேலியாவில் இந்த நிலைமை என்றால் சற்றே வெப்பம் குறைந்த ஆஸ்திரேலியாவின் தெற்கு திசை நோக்கி (அன்டார்டிகா நோக்கி) சென்றால், அங்கே புதிதாப்க பிறந்த ஆமைகளில் பெண் ஆமைகளின் சதவிகிதம் 65%. மீதி 35% மட்டுமே ஆண் கடல் ஆமைகள். தட்பவெப்ப மாற்றத்திற்கும் பச்சை கடல் ஆமைகள் ஒரே பாலினத்தில் பிறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பும்முன், இந்தப் பச்சைக் கடல் ஆமை இனம் குறித்துப் பார்த்து விடுவோம்.

இதன் பாலினத்தை எது தீர்மானிக்கிறது?
Green Sea Turtles என்று அழைக்கப்படும் பச்சைக் கடல் ஆமைகள் Chelonia mydas என்ற இனத்தைச் சார்ந்தவை. முட்டை வைத்துக் குஞ்சுபொரிக்கும் வழக்கமுடைய இந்த ஆமைகளின் பாலினத்தை, பாலூட்டிகளைப் போல அதன் மரபணு தீர்மானிப்பதில்லை. மாறாக, அந்த முட்டை இருக்கும் சீதோஷ்ண நிலையே அதைத் தீர்மானிக்கிறது. சுடுமணலில் வைக்கப்பட்ட பச்சை கடல் ஆமையின் முட்டை, பெண் ஆமையைப் பிறக்கவைக்கிறது என்றால், சற்றே குளிர்ந்த மணல் ஆண் ஆமையைக் கொடுக்கிறது. அப்படியென்றால் இங்கே மரபணு என்பது பாலினத்தை தீர்மானிப்பதே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என்றால் அதுவும் இல்லை. மரபணு என்பது பாலினத் தேர்வில் நேரடியாகத் தலையிடாமல், வேறு விதமாகக் காய் நகர்த்துகிறது.

50 சதவிகிதம் ஆண் ஆமைகள், 50 சதவிகிதம் பெண் ஆமைகள் பிறக்க வேண்டும். அந்த நிலை ஏற்பட ஒரு சீதோஷ்ண நிலை தேவைப்படும் அல்லவா? அதை ‘மையம்’ என்று இங்கே வைத்துக்கொண்டால், அந்த மையத்தின் தட்பவெப்பம் என்ன என்பதை இந்த ஆமைகளின் மரபணுதான் தீர்மானிக்கும். தனிப்பட்ட குழுக்களின் மரபணுவைப் பொறுத்து இந்த ‘மையம்’ மாறுபடுகிறது. எனவே, இங்கேதான் மரபணு என்பதே உள்ளே வருகிறது. தட்பவெப்பம் இந்த மையத்திற்கு மேலே சென்றால் அதிக அளவில் பெண் ஆமைகள், கீழே சென்றால், அதிக அளவில் ஆண் ஆமைகள். இதுதான் இயற்கையின் ரகசியக் கோட்பாடு. தற்போது வடக்கு ஆஸ்திரேலியாவில் தட்பவெப்பம் விண்ணை முட்டி இருப்பதால், புதிதாகப் பிறக்கும் பச்சைக் கடல் ஆமைகளில் பெரும்பாலானவை பெண்ணாகவே பிறக்கின்றன. அதுவும் இந்த ரைன் தீவில் 1990 களுக்குப் பிறகு தட்பவெப்பம் என்பது இறங்கவேயில்லை. அப்படியிருக்க அங்கே குழுவிற்கு ஓர் ஆண் ஆமை பிறப்பதே பெரிய அதிசயம்.

ஆண், பெண் வேறுபாடு எப்படிக் கண்டறிகிறார்கள்?
மற்ற மிருகங்களைப் போல அதன் உடல் அமைப்பை வைத்து எல்லாம் எதுவும் கூறிவிட முடியாது. மரபணு சோதனை நடத்தினால் கூட தெரிந்துவிடாது. ஏனென்றால், இங்கேதான் மரபணு அதைத் தீர்மானிப்பதில்லையே? ஒருவேளை அறுவை சிகிச்சை செய்வது போல அறுத்துப் பார்த்தால் தெரியலாம். ஆனால், அது மிகவும் கொடூரமான செயல். எனவே, ஆய்வாளர்கள் அதற்கு வேறோர் அறிவியல் ரீதியான முறையைக் கையாள்கிறார்கள். உடலில் இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவத்துக்குப் பெயர் 'பிளாஸ்மா' (Plasma). இந்த பிளாஸ்மாவை பிறந்த ஆமைகளிலிருந்து எடுத்துப் பரிசோதனை செய்கிறார்கள். இதில் ஆண் மற்றும் பெண்ணிற்கு என்று சில ஹார்மோன் வேறுபாடுகள் உண்டு. இதை வைத்துத்தான் ஆண் ஆமை, பெண் ஆமை என்று பிரிக்கிறார்கள்.

பச்சைக் கடல் ஆமைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
“இப்படி பெண் ஆமைகள் அதிகம் பிறந்தால் இந்தப் பச்சை கடல் ஆமைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் அனைவருக்கும் எழாமல் இல்லை. ஏற்கெனவே இருக்கும் ஆண் பச்சைக் கடல் ஆமைகள் ஒருபுறம் என்றால், இனப்பெருக்கக் காலத்தில் பெண் ஆமைகள் தெற்கு திசை நோக்கி நகரலாம். அங்கே ஆண் ஆமைகள் அதிகம் என்பதால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது” என்கிறார்கள் இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்.

No comments

Powered by Blogger.