ரொஹிங்கியர்களுக்காக மியன்மாரில் முகாம் அமைப்பு
அடுத்த வாரம் முடிவடையவுள்ள வாக்குறுதி அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மற்றும் இந்து அகதிகளுக்கான ஒன்று தயார் செய்யப்படும் என்று மியன்மார் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
மேற்கு மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைகளால் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற ரொஹிங்கிய அகதிகளை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைப்பது தொடர்பில் பங்களாதேஷ் மற்றும் மியன்மாருக்கு இடையில் கடந்த நவம்பரில் உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது. இது தொடர்பான செயற்குழு ஒன்றும் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்களை மியன்மாருக்குள் எவ்வாறு அனுமதிப்பது மற்றும் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகளுடன் தலைநகர் நைபிடோவில் ஒருநாள் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாக மியன்மார் சமூக நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் வின் மியாத் அயி குறிப்பிட்டுள்ளார்.
அகதிகளை மீள அழைக்கும் செயற்பாட்டை வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஆரம்பிக்க மியன்மார் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
“அடுத்த வாரம் தொடக்கம் நாடு திரும்புபவர்களை எம்மால் ஏற்க முடியுமாக இருக்கும். இது குறித்த நேரத்தில் நடைபெறும் என்றும் எம்மால் உறுதி அளிக்க முடியும்” என்று வின் மியாத் அயி குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் இராணுவம் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை ஒன்றை அடுத்தே 650,000க்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர். இந்த இராணுவ நடவடிக்கை ஒரு இன அழிப்பு செயற்பாடு என்று ஐக்கிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஏனைய தரப்புகள் வர்ணித்தன.
இந்நிலையில் 124 ஏக்கர் ஹ்லா போ கவுங் முகாமில் 625 கட்டடங்களில் சுமார் 30,000 பேருக்கு இட வசதி அளிக்கப்படுவதாக மியன்மார் அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது. எனினும் இங்கு 100க்கும் குறைவான கட்டடங்களே இந்த மாத இறுதியாகும்போது பூர்த்தி செய்யப்படவுள்ளன.
அகதிகளை மீள அழைக்கும் செயற்பாட்டுக்காக அமைக்கப்படும் முதல் முகாம் இதுவாகும்.
Post a Comment