"எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது - அதை கைத்தொலைபேசியாகப் பயன்படுத்துவேன்”
(மயூரன்)
யாழில் உள்ள டான் தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் நுழைந்து நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தொலைக்காட்சி நிறுவன கலையகத்துக்கு திங்கட்கிழமை மாலை ஒருவர் அத்துமீறி நுழைந்து பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியை தாக்கினார்.
அவ்வேளை அங்கு கூடிய நிறுவன ஊழியர்கள் முதியவரை மடக்கிப் பிடித்து அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேக நபரான முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றே வாக்குமூலம் வழங்கியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
“எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் தன்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர் . என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது.
அதை தேவையான போது கைத்தொலைபேசியாகப் பயன்படுத்துவேன்” என அவர் விசாரணையின் போது கூறியதாகவும், 20 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய குறித்த முதியவர் தற்போது யாழ்.பிரதான வீதியிலுள்ள அந்திமகால சேவை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்” எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முதியவரை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபர். மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்துகொள்கிறார் என நீதிவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
“இதனையடுத்து இந்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Post a Comment