Header Ads



டாக்டர் ரிப்கானின் சிந்தனையில், கொழும்புக்கு வெளியே முதலாவது இருதய வைத்தியசாலை


-ஏ எம் எம் முஸம்மில்-

வைத்திய கலாநிதி ரிப்கான் அவர்கள் , தமிழ் மொழிமூல முஸ்லிம் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பதுளையில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை ப/ சரஸ்வதி தேசிய பாடசாலையில் தமிழ் மொழிமூலம் கற்று இன்று இலங்கையில் பிரபலமானதொரு இருதய சத்திர சிகிச்சை வைத்தியசாலையொன்றை ( COOP HEART CENTER – GALL ) காலியில் நிறுவி தமது தலைமையில் நிருவகித்து வருகின்றார். இந்த (COOPERATIVE HOSPITAL ) கூட்டுறவு இருதய சத்திர சிகிச்சை வைத்திய சாலை இலங்கையில் ஆறாவது தனியார் இருதய வைத்திய சாலையாகவும் தலைநகர் கொழும்புக்கு வெளியே அமைந்த முதலாவது இருதய வைத்திய சாலையாகவும் திகழ்கின்றது.

கொழும்பில் இயங்கிவரும் பிரபல இருதய வைத்திய சாலைகள் பெரும்பாலும் சமூகத்தின் மேட்டுக் குடிகளை தமது வாடிக்கையாளர்களாக கொண்டு இலாபநோக்கில் செயற்பட்டுவரும் நிலையில் காலியில் இயங்கும் கூட்டுறவு இருதய வைத்திய சாலை ( COOP HEART CENTER – GALL ) சாதாரண மக்களுக்கும் அணுகக் கூடிய வகையில் விஷேட சலுகை விலையில் தமது சேவைகளை வழங்குகின்றது. குறிப்பாக ஆறு இலட்சத்தி ஐம்பதனாயிரம் ரூபா செலவில் ஒரு இருதய சத்திர சிகிச்சையொன்றை பூரணமாக மேற்கொள்ளக் கூடிய வகையில் தமது சேவைகளை வழங்குகின்றது. அதுமட்டுமல்லாது பணவசதியில்லாத இருதய சத்திர சிகிச்சையொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள நோயாளியொருவருக்கு மாதத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் இலவசமாக தமது சேவைகளை இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வழங்கி வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இலங்கையில் பத்தொன்பதனாயிரத்திற்கும் (19000 ) மேல் சாதகமான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு, கைதேர்ந்த கடந்த 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணரான வைத்திய கலாநிதி நாமல் கமகே அவர்கள் இவ்வைத்திய சாலையில் இணைந்து கடமையாற்றுவதாகும். 

டாக்டர் ரிப்கானின் சிந்தனையில் உதித்த 2016 ம ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப் பட்ட இவைத்திய சாலை , மேற்குலகின் அதிநவீன சத்திர சிகிச்சை உபகரணங்களை கொண்டு வடிவமைக்கப் பட்ட ( ULTRA MODERN CARDIOTHORACIC SURJICAL OPERATION THEARTER ) சத்திர சிகிச்சை நிலைய வசதிகளைக் கொண்டது. இதன் முக்கியத்துவம், தேவை கருதி இந்த வைத்திய சாலையின் திறப்பு விழாவுக்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் உட்பட அமைச்சர்கள் இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டது முக்கியமாக குறிப்பிடப்பட்ட வேண்டிய விடயங்களாகும். 

சுமார் 34 வயதேயான இளம் டாக்டர் ரிப்கானின் சிந்தனையில் உதித்த இவ்வைத்திய சாலையின் உதயமானது பதுளை தமிழ் கல்வி வரலாற்றில் பதுளை மண்ணுக்கு புகழ் சேர்க்கும் ஓர் இமாலய சாதனையாகும்.

முஹம்மது மீயான் ( வங்கி உத்தியோகத்தர்) ஆசிரியை சம்சமீ தம்பதிகளுக்கு 1983 ம் ஆண்டு குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்த ரிப்கான் அவர்கள் மிக எளிமையாகவும் சினேக பூர்வமாகவும் மக்களுடன் பழகக் கூடியவர். தம் இளமை காலத்தியே பல இமாலய சாதனைகளை படைத்து சிகரம் தொட்டவர்.

1993ம் ஆண்டில் தரம் ஐந்து புலமை பாரிஸில் பரீட்சையில் சித்தியடைந்து 1999ல் க பொ த (சா/த) மிகத்திறமையான பெறுபேறுகளை பெற்று கொழும்பு ரோயல் கல்லூரி அனுமதி கிடைத்து. இங்கு இவர் ஆங்கில மொழிமூலம் லண்டன் O/L பரீசைக்கு தோற்றி அதில் திறமையாக சித்தியெய்திய பின் உயர்தரத்தில் உயிரியல் துறையில் கற்று 2002ம் ஆண்டில் முதல் அமர்விலேயே சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். வைத்திய துறையில் தமக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக தமது ஆரம்ப மருத்துவ கல்வியை ஆரம்பித்து ஹோமியோபதி மற்றும் அக்குபஞ்சர் வைத்திய துறையில் கற்று களுபோவில ஆசிரிய மருத்துவமனையில் (TEACHING HOSPITAL – KALUBOWILA ) சேவையாற்றினார். அதன் பிறகு 2005 ம் ஆண்டு தமது உயர் மருத்துவ பட்டப் படிப்பிற்காக (MBBS) சைனாவின் டியான்ஜின் மருத்துவக்கல்லூரியில் (TIANJIN MEDICAL UNIVERSITY OF CHAINA ) சேர்ந்து 2010ம் ஆண்டில் தனது முதல் தர மருத்துவ கலாநிதி பட்டத்தை பெறுகின்றார். அத்துடன் 2011ம் ஆண்டில் இலங்கை மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்திற்கான பரீட்சைக்கு தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று இலங்கை மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறுகின்றார்.

அடுத்து அதே ஆண்டில் மக்கள் சீனா அரசாங்கத்தின் மூலம் வழங்கப் படுகின்ற உயரிய மருத்துவ சத்திர சிகிச்சை மேற்படிப்பு பயிற்சி நெறிக்கான புலமை பரிசிலை (Masters in surgery - specializing in orthopedic Trauma and sports medicine) பெறுவதற்காக சீன அரசாங்கத்தால் இவர் தேர்வு செய்யப் படுகின்றார். இப்புலமை பரிசிலுக்காக 360 பேர் தேர்வு செய்யப் படுவதுடன் ஆசியா கண்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே இதற்கான சந்தர்ப்பம் வழங்கப் படும் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும். குறிப்பிட்ட இந்த பாடநெறியில் அடுத்தக்கட்ட தேர்வுகளுக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிகரமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும். குறிப்பிட இந்த மூன்று வருட பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப் பட்டமையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி பாரியார் சிறந்தி ராஜபக்ஷவினால் பாராட்டி கௌரவிக்கப் பட்டுள்ளார். மேலும் அவுஸ்திரேலியாவில் மருத்துவராக கடமையாற்ற தகுதிகான் பரீடையான அவுஸ்திரேலிய மருத்துவ கவுன்சில் மூலம் 2012 ம் ஆண்டு நடத்தப் பட்ட பரீட்சைக்கு தோன்றி அதிலும் முதல் அமர்விலேயே சித்தி பெற்றுள்ளார். 

மார்க்க நெறிகளுடன் சமூக சிந்தையுடன் தமது பெற்றார்களால் வளர்க்கப் பட்ட டாக்டர் ரிப்கான் இந் நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கும் விசேடமாக எமது பதுளை முஸ்லிம் கல்வி சமூகத்திற்கும் தமது இளம் வயதிலேயே சிறந்த முன்மாதிரிகளை காட்டித் தந்துள்ளார். குறிப்பாக சிறுநீரக மாற்று / அறுவை சிகிச்சை, இருதய சிகிச்சை போன்ற பாரிய நோய்களுக்கு புகழ்பெற்ற சில முஸ்லிம் வைத்தியர்கள் , முஸ்லிம்களால் நிருவகிக்கப் படும் சில தனியார் வைத்திய சாலைகள் எந்தளவு தூரம் பணத்தின் பின்னால் தமது வியாபரத்தை அகல விரித்துள்ளார்கள் என்பது பற்றி அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதுண்டு. அந்த வகையில் சாதாரண மக்களின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமது உயரிய சிந்தனையில் உதித்த என்னத்திற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார் இந்த இளம் வைத்தியர் ரிப்கான் அவர்கள். 

அதே போல் பதுளை முஸ்லிம்கள் கட்டாயம் கல்வியில் முன்னேற வேண்டும், நமது எதிர்கால சந்ததியினர் கல்வியில் முன்னேற பிரதான தடையாக உள்ள அவர்களின் பொருளாதார தேவைகளை திட்டமிட்டு தகர்க்க வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் பல சமூக தொண்டு நிறுவனங்களுக்கு கைகொடுத்து உதவி வருகின்றார் டாக்டர் ரிப்கான் அவர்கள். அந்த வகையில் அண்மையில் பதுளை வை எம் எம் ஏ நிறுவனத்தில் நடந்த நிகழ்வொன்றில் பிரதான அதிதியாக கலந்து கொண்ட டாக்டர் ரிப்கான் அவர்கள் பதுளை மாணவர்களின் உயர்கல்விக்கான பொது நிதியம் ஒன்றிற்கு தமது உயரிய பங்களிப்பை வழங்கி குறித்த அந்த நிதியம் தொடர்ந்து செயற்பட உதவியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. Good examples to youngsters to develop their self. But I don't think Rs 65000.00 is cheap. It is ripoff.

    ReplyDelete
  2. It is good example to youngsters to develop their future, but the price RS 65000.00 is not cheap, rather it's a rip off.

    ReplyDelete

Powered by Blogger.