Header Ads



துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்


கத்தார் நாட்டுக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவத்துக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.

அல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங்கு முகாமிட்டுள்ள செய்தியாளர்கள் அன்றாட நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

No comments

Powered by Blogger.