"நாய் கடித்தவர்களை போன்றும், பாம்பு விஷமேறியவர்களை போன்றும் தடுமாறுகின்றனர்"
மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆகவே,உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் எமக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரானாலும் சட்ட நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம். இது குறித்த விசாரணைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் பூரண ஆதரவு நல்குவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
மேலும் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான பிணைமுறி வழங்கலில் பாரிய மோசடி நடந்துள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தலைமைகளுக்கு நாம் அழுத்தம் பிரயோகம் செய்வோம். 20 வருடங்கள் மோசடி செய்து விட்டு தற்போது நாய் கடித்தவர்களை போன்றும் பாம்பு விஷமேறியவர்களை போன்று கூட்டு எதிரணியினர் தடுமாறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார நிலைமை குறித்து வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னைய ஆட்சியின் மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்க மாத்திரம் நல்லாட்சியை ஏற்படுத்தவில்லை. தற்போதைய ஆட்சியில் நடக்கும் ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே நல்லாட்சியை உருவாக்கினோம். இதன்படி மத்திய வங்கி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தவுடனேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை அமைத்து விசாரணை செய்தார்.
அதன்பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவிலும் விசாரணை செய்தோம். இந்த விசாரணைகள் அனைத்திற்கும் நாம் பூரண ஆதரவு வழங்கியது மாத்திரமின்றி அந்த விசாரணைகள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்தது.
என்றாலும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நாம் ஊழல் மோசடிகளை மறைக்க வேண்டுமாயின் விசாரணை குழுவினையோ அல்லது கோப்குழு விசாரணைகளையோ ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் நாம் பூரண விசாரணைக்கு அடித்தளமிட்டு தற்போது குறித்த விசாரணைகள் யாவும் சட்டமா திணைக்களத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
நாம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலதிகமாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை அமைத்தார். எனினும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினராலும் சட்ட நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம். இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்.
அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும். கோப் குழு விசாரணையை அடுத்து பெப்பச்சுவல் நிறுவனத்தின் 12 பில்லியன் ரூபாவை அரச மயப்படுத்தி அந்நிறுவனத்தின் நிதி பயன்பாடுகளை மொத்தமாக இரத்து செய்தோம். ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதுமாத்திரமின்றி சுமார் 20 வருடங்களாக ஆளும் கட்சியில் அமர்ந்து கொண்டு பாரியளவிலான மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றி விட்டு பிணைமுறி விவகாரத்தில் நாய் கடித்த, பாம்பு விஷமேறியவர்களை போன்று தடுமாறுகின்றனர். 2008 முதல் 2015 வரை 4702 பில்லியன் ரூபா பிணைமுறி மோசடி நடந்துள்ளது. எனவே தற்போதைய ஆட்சியின் மோசடிகள் கடுமையான அவதானம் செலுத்துவதனை போன்று முன்னைய ஆட்சியின் பிணைமுறி விநியோகம் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Post a Comment