"மஹிந்தவை பிரதமராக்கும், பயணம் ஆரம்பம்"
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக்கூற வேண்டும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல்வாதி களுக்கு சட்டத்தின் மூலமாக அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தினார்.
2020 இல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து கருத்துக்கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே குற்றத்திற்கான முழுமையான பொறுப்பையும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இப்போதும் நாங்கள் அதே நிலைப்பாட்டில் இருந்தே கருத்து வெளியிடுகின்றோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 50 நாட்களுக்குள் மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைக்க பல சதித்திட்டங்கள் இடம்பெற்றன. எனினும் கோப் குழுவின் செயற்பாடுகளின் பின்னர் ஜனாதிபதி மூலமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு மூலமாக அவை தடுக்கப்பட்டு இப்போது ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. விசாரணை ஆணைக்குழு தமது அறிக்கையினை ஜனாதிபதிக்கு வழங்கியதுடன் நிறுத்திவிடக் கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனைய ஊழல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் நபர்கள் இந்த விடயத்தில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய வங்கியில் மேற்கொண்ட கொள்ளை சாதாரண விடயம் அல்ல. இது மக்களின் பணத்தை கொள்ளையடித்த மிகப்பெரிய தேசத்துரோக செயலாகும். ஆகவே சட்டத்தின் அதியுச்ச தண்டனையினை குறித்த குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும். ஜனாதிபதி தனது அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய வங்கி ஊழல் வாதிகளையும் அவர்களுடன் தொடர்புபட்ட சகல தரப்பையும் தண்டிக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த மக்கள் வரத்தை அவரே மீறியதாக அமையும்.
2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டினை புதிய அரசாங்கத்திற்கு ஒப்படைத்த போது இந்த நாடு பூரண அபிவிருத்தி கண்ட நாடக இருந்தது. எனினும் இன்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாட்டின் நிலைமைகள் முழுமையாக மாற்றம் கண்டுள்ளன. அன்று எமது ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் அனைத்தும் இன்று நிறுத்தப்பட்டுள்ளன, வேலைத்திட்டங்களை கைவிட்டுள்ளனர், கிராமங்கள் அழிந்து வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கம் நாட்டினை முழுமையாக சர்வதேச நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து எமது வழங்களை சூறையாடும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்திய வங்கியில் கொள்ளையடித்து. இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகளுக்கு மத்திய வங்கியின் கொள்ளையடித்த நிதியே வழங்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல செயற்பாடுகளும் அர்ஜுன் மஹேந்திரன் கொள்ளையடித்த நிதியில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றது.
ராஜபக் ஷக்களின் ஆட்சியில் கொள்ளையடித்ததாக கூறினார்கள், தாங்கள் தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே மிகவும் மோசமான கொள்ளைக்கார ஆட்சியாக மாற்றம் கண்டுள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறியவர்கள் இன்றுவரை அவற்றை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளனர். எமது ஆட்சியில் குற்றங்கள் இடம்பெற்றவில்லை என கூறவில்லை, எனினும் ஒருசிலர் செய்த குற்றங்கள் காரணமாக பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மஹிந்த ராஜபக் ஷவை தண்டிக்கவே எமது மக்களும் வாக்களித்தனர். எனினும் நாட்டுக்கு தகுதியான தலைவர் மஹிந்த ராஜபக் ஷதான் என்பதை அவர் ஆட்சியில் இல்லாத போதே மக்கள் விளங்கிக்கொண்டனர். ஆகவே இப்போது நாம் ஆரம்பித்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றியில் இருந்து நாம் மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிரதமராக்கும் எமது பயணத்தை ஆரம்பிப்போம். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான போராட்டமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
துபாய் நாட்டில் இரகசியமாக பதுக்கிவைத்துள்ள கோடான கோடி டொலர்கள் யாருடையது? இலங்கையைச் சேர்ந்த பிரபல்யமான முக்கியஸ்தவர்களின் பணம் எனக்கூறியபோதிலும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் யார் என தேடி அந்த பணத்தை நாட்டுக்குத்திருப்பி பெறமுடியாதா என அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்துச் செயற்படவேண்டும்.
ReplyDelete