பொலிஸாரைக் கண்டு கைகளால் சைகைசெய்து, உணவு கேட்ட 94 வயது தாய்
அறை ஒன்றுக்குள் முறையாக உணவு கூட வழங்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த 94 வயதான ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவரை கண்டி பொலிஸ்நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சிலர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை, யட்டியாவல, பிரதேச தோட்டத்திலுள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வயதான தாயின் மகள் ஒருவரே இவ்வாறு செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலசலம் கழித்த பின்னர் எவரும் சுத்தம் செய்யாததால் கட்டிலிலும் அவரது உடம்பிலும் புழுக்கள் காணப்பட்டதாகவும் மூடிக் கிடந்த இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த மூதாட்டி பொலிஸாரைக் கண்டதும் கைகளால் சைகை செய்து உணவு கேட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் இத்தாய்க்கு உள்ளனர். ஒரு புதல்வி தமது வீட்டில் தாயை தடுத்து வைத்து ஏனைய சகோதர, சகோதரிகள் தாயை கவனிக்க சந்தர்ப்பம் வழங்காமல் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தப்பெண் அவரது தாய்க்கு பிரதேச வாசிகள் ஏதாவது உணவை வழங்கக்கூட இடமளிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமது சகோதரி ஒருவரினால் ஏனைய சகோதர, சகோதரிகள் தாயை கவனிக்க இடமளிக்காமல் தாயை சிறை வைத்துள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கவுக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து அவர் கண்டி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து நேற்று முன்தினம் பொலிஸார் இந்த வயோதிப தாயை மீட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Post a Comment