Header Ads



சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வில் இளவரசர் எட்வேர்ட்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினரான பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் நடைபெறவுள்ளது. காலிமுகத் திடலில் சுதந்திர நாள் பிரதான அணிவகுப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இளைய மகளான இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக இளவரசர் எட்வேர்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர நாள் 1998ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக, அவரது மூத்த மகன் இளவரசர் சார்ள்ஸ் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அரச குடும்பத்தினருக்கும் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

400 ஆண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்த சிறிலங்கா, 150 ஆண்டுகள் பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து, 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.