6 பிள்ளைகளைப் பெற்ற தாய், புழுக்களுடன் மீட்பு - 6 மாதங்கள் அகற்றப்படாத மலமும், சிறுநீரும்
ஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயொருவர், அறையொன்றில் சிறைவைக்கப்பட்ட நிலையில், மலசலம் மற்றும் புழுக்களுடன், கடந்த ஆறு மாதங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமேயின்றி வாழ்ந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை, யடியாவில அந்தோனி தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.
94 வயதுடைய மேற்படி தாயை, கண்டி பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேற்படி தாய்க்கு, மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளென ஆறு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஒரு மகள், குறித்த தாயை, கடும்போக்குத்தனமாக நடத்தியுள்ளாரெனத் தெரியவருகிறது.
மேற்படி தாயை, அறையொன்றில் வைத்து சிறைப்படுத்திய அவரது மகள், அவருக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றும் அந்தத் தாய் இருந்த அறையில், படுக்கை விரிப்பைத் தவிர வேறு எவ்வித வசதிகளும் இருக்கவில்லை என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிருந்த அறை பூட்டப்பட்டிருந்ததால், வெளியில் செல்வதற்கு வழியின்றி குறித்த அறையிலேயே சிறுநீர், மலம் கழித்திருந்ததாகவும் அந்தக் கழிவுகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததால், அறை முழுவதும் துர்நாற்றம் வீசியதுடன் உடலில் புழுக்கள் மொய்த்த நிலையிலேயே, அவர் மீட்கப்பட்டாரன்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கும்போது, அவர் தனக்குப் பசிக்கிறது என்றும் உண்பதற்கு ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள் என்றே முதலில் கேட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய பிள்ளைகளை, இவரது அருகில் நெருங்கவிடாத அளவுக்கு, அவரது மகள் கடும்போக்காக நடந்து கொண்டுள்ளாரென்றும் பிரதேசவாசிகள் உணவளிக்க முற்பட்டாலும் அதற்கும் அவர் அனுமதியளிப்பதில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது தாய், அறையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டு எவ்வித வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றாரென, மேற்படி பெண்ணின் மகனொருவர், மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, அந்தத் தாய் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரை, பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment