காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி - இந்தியா வழங்குகிறது
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் (6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று -10- கையெழுத்திட்டுள்ளன.
புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க இந்தியா இணங்கியிருந்தது.
இதையடுத்து, 2011 ஜூலையில் இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து 45.27 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்தது.
இதனடிப்படையிலேயே, நேற்று இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபையே நடைமுறைப்படுத்தவுள்ளது.
Post a Comment