குவைத்தில் 2 இலங்கையர்களின் மரணத்திற்கு காரணமான நச்சுப்புகை
குவைத்தில் பணியாற்றிய நிலையில் மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த இரு பணிப்பெண்கள் நச்சுப்புகையை சுவாசித்தமையினால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட பொதுவைத்திய சாலையின் மரண பரிசோதகர் கீர்த்தி சிறிஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குவைத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் வெளியான நச்சுப் புகையை சுவாசித்தமையினால் அவ்வீட்டிலுள்ள வெவ்வேறு அறைகளில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த பணிப்பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான டீ. செல்வகுமாரி (30) மற்றும் திருமணமாகாத ஜீ.ஜீ. நிலந்தி ஷிரோமினி குணவர்தன (40) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரதம சட்ட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக்கினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின்போது முன் வைக்கப்பட்ட சாட்சிகளுக்கமைய விஷப்புகையை சுவாசித்தமையினால், சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவ்விருவரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment