24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பில், பாதுக்கை பள்ளிவாசல்
-ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.ஆர்.எம்.வசீம்-
புதுவருடத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் பாதுக்கை, கலகெதர சுவைலி எனும் பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு, பள்ளிவாசலின் முன்கதவின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசல் மத்ரஸதுல் அமீரியா என்னும் பழைய பெயரிலும் அழைக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை சுபஹு தொழுகைக்காக அதான் கூறச் சென்ற நஸீர் என்பவரே பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளமையை முதலில் கண்டு பாதுக்கை பாடசாலை வீதியில் இருக்கும் பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அஸீஸா அல்ஹமீடின் தலைவரான அக்ரம் ஹாஜிக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
சம்பவம் உடனடியாக பாதுக்கை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்படவே பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்தனர். பொலிஸ் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு முயற்சித்தபோதும் பலன் ஏற்படவில்லை.
பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட குழுவொன்றும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டது. பள்ளிவாசலுக்கு தற்போது 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பொலிஸார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இனங்காண்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் உறுதி வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுக்கை பாடசாலை வீதி மஸ்ஜிதுல் அஸீஸா அல்ஹமீட் பள்ளிவாசலின் தலைவர் அக்ரம் ராஜி ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில்,
“கலகெதர மஸ்ஜிதுல் சுவைலி பள்ளிவாசல் கதவு பாரிய ஏழு கற்களால் தாக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிவாசல் கதவின் கண்ணாடி சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் பள்ளிவாசலின் அலுமினியக் கதவும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. பக்கத்தில் இருந்து வந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கவேண்டும். அன்றைய தினம் பள்ளிவாசலில் இருந்த மௌலவி அங்கு இருக்கவில்லை. ஊருக்குப் போயிருந்துள்ளார். பள்ளிவாசலுக்கு ஜமாஅத் வந்து தங்குவதுண்டு. அன்று இரவு ஜமாஅத்தும் அங்கு தங்கியிருக்கவில்லை. இந்தப் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்கின்றன" என்றார்.
Post a Comment