படைவீரரின் இதயத்திலிருந்து, 20 வருடங்களின் பின் அகற்றப்பட்ட ரவை (படங்கள்)
(ரெ.கிறிஷ்ணகாந்)
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரரான விஜேசுந்தர பண்டாரவின் இதயத்தில் சிக்குண்டிருந்த துப்பாக்கி ரவை ஒன்று, சுமார் 20 வருடங்களின் பின்னர் சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட சம்பவம் காலியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
காலியிலுள்ள கூட்டுறவு வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் நாமல் கமகே உள்ளிட்ட வைத்தியர் குழாமினால் இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரவை அகற்றப்பட்டதன் பின்னர் விஜேசுந்தர தற்போது சிறந்த தேகாரோக்கியத்துடன் காணப்படுகின்றார்.
இந்நிலையில், சத்திரசிகிச்சைக்கு உள்ளான விஜேசுந்தர ஊடகம் ஒன்றுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,இந்த விடயம் எனக்கு புதுமையாக உள்ளது. எனது உடலில் ரவை ஒன்று உள்ளது என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், அது இயத்தினுள்தான் காணப்பட்டதென்பதை நான் அறிந்திருக்கவில்லை. இதனை உடலில் வைத்துக்கொண்டே கடந்த காலங்களில் கடினமான பல வேலைகளை செய்துள்ளேன். வயல் வேலைகள், வீட்டு வேலைகள் உள்ளிட்டவைகளை செய்தேன்.
இராணுவத்தில் 1987 ஆம் ஆண்டு இணைந்தேன். எனது தொழிலை முதலாவது வடக்கிலிருந்து ஆரம்பித்தேன். அதன்பின்னர் தொழிலின் நிமித்தம் 1997 ஆம் ஆண்டில் வவுனியா, மாங்குளம் பிரதேசத்துக்கு சென்றேன்.
அன்று மாங்குளம் இராணுவ முகாமை அண்டிய காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் எமக்குமிடையே பாரிய யுத்தம் நடைபெற்றது. அதில் வெற்றிகொண்டு அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு திரும்பும்போது, மறைந்திருந்த விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவர் எம்மீது தாக்குதல் நடத்தினார். அதன் போதே நான் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானேன்.
அதன்பின்னர், சக நண்பர்களால் நான் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன். அங்கு எனக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் குறித்த ரவையை அகற்ற தேவையில்லை. அதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றனர்.
அதனையடுத்து. வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய சில காலத்திலேயே இராணுவத்தில் இணைந்து மீண்டும் பணியாற்றினேன். இந்த ரவையினால் உயிருக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்று வைத்தியர்கள் கூறியதால் அதுபற்றி நானும் பெரிதாக கருத்திற்கொள்ளவில்லை.
இச்சம்பவத்தின் பின்னரும் ஒருதடவை மோட்டார்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு கடமையிலிருந்து ஓய்வு பெற்றேன்.
அதன்பின்னர் ஓய்வூதியத்தில் எமது ஊரான பிபிலையில் வயல் காணி ஒன்றை வாங்கி அதில் விவசாயம் செய்துவந்தேன் இவ்வாறு இருக்கையில் அண்மையில் மார்ப்புப் பகுதியில் கடும் வலி ஏற்பட்டதையடுத்து, ஆசிரியையான எனது மனைவி என்னை மொனராகலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் என்றார்.
அதன்பின்னர் பற்பல சிகிச்சை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் குறித்த ரவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டேன் எனக் கூறினார்.
அதற்கமைய. பலரது வேண்டுகோளுக்கு இணங்க விஜேசுந்தர, காலி கராப்பிட்டியிலுள்ள பிரபல இதய சத்திரசிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு ரவை அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர்கள் தெரிவிக்கையில், இடக்கை வழியாக உடலினுள் நுழைந்த ரவையே இதயத்தை அடைந்துள்ளது. அதனை நாம் பரிசோதனையூடாக அறிந்து கொண்டோம். அதன்பின்னர் சுமார் 45 நிமிட சத்திரசிகிச்சையின் பின்னர் ரவை அகற்றப்பட்டது.
இடக்கையில் தோட்பட்டை பகுதியில் இந்த ரவை உள்நுழைந்து இதயத்திலிருந்து கையுடன் தொடர்புபடும் நாளத்தின் வழியாக இதயத்துக்கு பயணித்து இதயசுவற்றை துளைத்துக்கொண்டு, வலது இதயவறைக்கு பயணித்து அங்குள்ள நார் இழையங்களில் சிக்குண்டுள்ளது.
இதேவேளை, இந்த ரவையினால் விஜேசுந்தரவுக்கு மார்ப்பு வலி ஏற்பட்டிருக்கவில்லை என்றும், இரத்தநாளமொன்றில் ஏற்பட்டிருந்த அடைப்பொன்றின் காரணமாகவே அவருக்கு வலி ஏற்பட்டதாகவும் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்க முழுமையான தகுதி இந்த போர் வீரன் விஜேசுந்தரவுக்கு மட்டும் தான் உள்ளது.
ReplyDelete👑👑👑👑
Delete👑👑👑👑
Delete