Header Ads



நட்டம் 11 பில்லியன், பெர்பச்சுவலின் 12 பில்லியனை முடக்கியதாக ரணில் பெருமிதம்

திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று -10- விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 12 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக திறைசேரி கொடுக்கல் வாங்கலின் ஊடாக மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டம் 11 பில்லியன் ரூபாவாகும். இதற்கு அமைவாக, சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பெரும்பாலான திறைசேரி முறிகள் நேரடி, தனிப்பட்ட வெளியீட்டு முறையிலேயே இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்த வெளிப்படைத் தன்மையும் இருக்கவில்லை என்றும் நிதிச் சபையின் அனுமதியும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.