"தாருன் நுஸ்ரா" - 11ஆம் திகதி விசாரணை
தெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அவரது உறவினருடன் தங்கவைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி காப்பகத்தில் உள்ள பதினெட்டு சிறுமிகள் மீது பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக காப்பகத்தின் முன்னாள் பொறுப்பாளரின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலம் இவ்விவகாரம் வெளியானது. எனினும் டிசம்பர் 7ஆம் திகதி இது குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் இவ்விவகாரம் வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையில், அதே டிசம்பர் மாதம் 11ஆம் திகதி, குறித்த சிறுமியை காப்பகத்தின் புதிய காப்பாளர் அடித்து, காப்பகத்தை விட்டு வெளியேற்றியிருந்தார்.
இதையடுத்து சிறுமியின் பாதுகாவலரான உறவு முறைப் பெண் கொஹுவல பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
பொலிஸாரின் வழிகாட்டலின் பேரில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காப்பகத்தில் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில், குறித்த சிறுமியை அவரது பாதுகாவலரான பெண்ணின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Post a Comment