கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதிகள் 10 ம் திகதிமுதல் மூடப்படும்
புதிய களனிப் பாலமருகே களனி மற்றும் வத்தளைக்குப் பிரிந்து செல்லும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வீதிகள் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த வழித் தடத்தில் புதிய பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதை முன்னிட்டே இந்தத் தடை ஏற்படுத்தப்படுவதாகவும் மேற்படி சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குனர் நாயகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிவித்தலில்,
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு வரும் வாகனங்கள் வழக்கமான வழித்தடத்தில் தமது பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் கொழும்பில் இருந்து களனி மற்றும் வத்தளைக்கு வெளியேறும் நெடுஞ்சாலை வீதிகளைப் பயன்படுத்துவோர் வேறு வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து களனி மற்றும் பேலியகொடை செல்பவர்கள் பேலியகொடை இடம் மாற்று வீதி வழியாக கொழும்பு-கண்டி வீதியை அடையலாம் என்றும் வத்தளை மற்றும் பேலியகொடை செல்பவர்கள் அதே பேலியகொடை இடம் மாற்று வீதி வழியாக கொழும்பு - நீர்கொழும்பு வீதியை அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment