முஸ்லிம்களும், பௌத்தர்களும் சமாதானமாக வாழ்கின்றனர் என்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்
தாய் நாட்டிற்கும், பிரதேசத்தின் இன நல்லிணக்கத்திற்கும் மகத்தான பங்களிப்புகளை மேற்கொண்ட 18 சமூக ஆர்வளர்களை ஹெம்மாதகமை பௌத்த- இஸ்லாமிய சமூக நலன்புரி அமைப்பு கடந்த வெள்ளியன்று கௌரவித்தது.
ஹெம்மாதகமை பௌத்த- இஸ்லாமிய சமூக நலன்புரி அமைப்பின் இணைத் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் அஸ்ஹர் தலைமையில் சல்மா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதிகளாக மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி பெதங்கொட, அரனாயக்க பிரதேச செயலாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் மற்றும் பதில் நீதவான் கமணி குமாரி மேகசூரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இன நல்லிணக்கத்திற்கும் பங்களிப்புகளை மேற்கொண்டு வரும் ஹபுவிட நாரத தேரர், இலுக்கொட ஞானாநந்த தேரர், சுசில தேரர், அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம், டபில்யு.பி.விக்ரமபால, டாக்டர் ஆரியசேன கமகே, என்.எம்.அமீன், ஆர்.எல்.சனத் ரஞ்சித், எம்.எச்.எம்.யூஸுப், டபில்யு.ஏ.சுமனசிறி வீரசேகர, எம்.எச்.எம்.ஹசன், டீ.எம்.ஜீ.தேவகிரி, பீ.சோமவீர ஹேமசந்திர, கே.டபில்யு.செனரத் வீரசிங்க, கே.ஆர்.குமார செனவிரத்ன, ஆர்.ஜீ.ஏ.ரீ.ரனதுங்க, ஏ.டபில்யு.எம்.முனாஸ், எம்.ஆர்.செனவிரத்ன கொடபோதிய ஆகியோர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதிகளில் ஒருவரான மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி பெதங்கொட உரையாற்றும்போது,
கலாசார நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மாவனல்லை வலயத்தில் முஸ்லிம்களும் பௌத்தர்வளும் சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டேன். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒருவர் உலகில் உள்ள மொத்த தூசன வார்த்தைகளைக்கொண்டு என்னைத் தூற்றி கடிதமனுப்பியிருந்தார். கடிதத்தை எழுதியவரின் கைகள் உடைந்துபோக வேண்டும். நாம் ஒன்றுபட்டு வாழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாத பிரிவினரும் சமூகத்தில் இருக்கின்றனர். சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறானோரே கீழ்த்தரமாக செயற்படுகின்றனர்.
மாவனல்லை பிரதேசத்தில் இனவாத நிலைமை இல்லாததையிட்டு மகிழ்ச்சியடைய முடியும். எமது பௌத்த, இஸ்லாம் இந்து மதத் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர். நாம் நண்பர்கள், சகோதரர்கள் போன்று சிரித்துக்கொண்டு, எவ்வித சந்தேகமோ, அச்சமோ இன்றி வாழும் நிலைமை உருவாக வேண்டும். ஹெம்மாதகமை மதத் தலைவர்களின் பிணைப்பு பிரச்சினைகள் ஏற்படுதவை தடுக்கின்றது. அது பெரும் மன திருப்தியை தருகின்றது. இந்நிலைமை என்றும் தொடரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
நிகழ்வில் அரனாயக்க பிரதேச செயலாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் உரையாற்றும்போது,
நான் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதால் இந்நிகழ்வையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இன நல்லிணக்கம் குறித்து பௌத்த- இஸ்லாமிய மதப் போதகர்கள் இருவரும் உரையாற்றியதை நாம் செவிமடுத்தோம். இலங்கையர்கள் முகங்கொடுத்த சுனாமி, வெள்ளம், அரனாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மண் சரிவு என எதுவுமே இன மத பேதம் பார்த்து நிகழவில்லை. அனர்த்தங்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். அனர்த்தங்கள் அவ்வாறெனின் ஏனையவையும் அவ்வாறுதான். அனர்த்தங்களுக்கு மக்கள் இன, மத பேதமின்றி உதவினர். இவற்றிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்- என்றார்.
(அரனாயக்க நிருபர் எம்.ஆர்.எம்.அமீன்)
Post a Comment