Header Ads



தவானிடம் மன்னிப்பு கேட்டது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

துபாயில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி, குழந்தைகள் தவித்த விவகாரம் தொடர்பாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மும்பையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தது. இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார். தவான் மும்பையில் இருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். தென்ஆப்பிரிக்காவிற்கு அனைவரும் புறப்பட தயாராக இருந்த நிலையில், தவானின் மனைவி மற்றும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்கள் வேண்டும் என்று எமிரேட்ஸ் ஏர்லைன் நிர்வாகிகள் கேட்டுள்ளனர். இதற்கான ஆவணங்கள் ஏதும் தவானிடம் இல்லை. இதனால் நிறுவனம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா புறப்பட மறுத்து விட்டது.

இதனால் துபாயில் இருந்து தென்ஆப்பிரிக்காவிற்கு தவான் தனியாகவே சென்றார். இதுதொடர்பாக தவான் தனது டுவிட்டர் பக்கத்தில், துபாயில் இருந்து தென்ஆப்பிரிக்காவிற்கு செல்வதற்கு கேட்ட ஆவணங்களை மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டபோது ஏன் கேட்கவில்லை? அந்த நிறுவனத்தின் ஊழியர் எந்தவொரு காரணமும் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்’’ என்று குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், துபாயில் நடந்த சம்பவம் தொடர்பாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிரிக்கெட் வீரர் தவானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஆனால் விதிகளுக்கு உட்பட்டுதான் எங்களின் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர். எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருக்கும் விதிமுறைகளை பின்பற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். வாடிக்கையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.