Header Ads



கொதிக்கப் போகும் அரசியல், மைத்திரி, ரணில் பிரிவார்களா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இவ்வாரத்துக்குள் இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்படி சந்திப்புக்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதானது தெற்கு அரசியல் களத்தில் முக்கியத்துவமிக்க விடயமாக பார்க்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விசாரணை அறிக்கை கைக்குக் கிடைத்த பின்னர், மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். அரசியலில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதியின் முடிவு அமையும் என்றும், கூட்டு அரசின் ஆயுளில்கூட அந்த முடிவு தாக்கத்தை செலுத்தலாம் என்றும் அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 28ஆம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அதிரடி அரசியல் மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் முடிவானது கூட்டரசு உறவை பாதிக்கக்கூடாது என்று இருதரப்பிலுமுள்ள மூத்த உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதன் நிமிர்த்தம்தான் இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிணைமுறி அறிக்கை வெளியாகும் தறுவாயில் இந்தச் சந்திப்பை நடத்தினால் அது ஜனாதிபதியின் நடுநிலைத் தன்மையில் தாக்கத்தை செலுத்தலாம் என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் கருதுகின்றனர்.

அத்துடன், பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கவுள்ள முடிவை மையப்படுத்தியே சு.கவின் தேர்தல் பரப்புரை அமையுமெனக் கருதப்படுவதால், இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றால் பரப்புரையிலும் அது பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். எனவே, இந்தச் சந்திப்புக்கு மைத்திரி தரப்பிலிருந்து இன்னும் உறுதியாக பச்சைக்கொடி காட்டப்படவில்லை.

எனவே, பிரதமருடனான சந்திப்பை ஜனாதிபதி தவிர்ப்பதற்குரிய சாத்தியமும் இருப்பதாக அறியமுடிகின்றது. எது எப்படியோ செயலாளர்கள் மட்டத்திலான சந்திப்பானது இருகட்சிகளுக்குமிடையில் வருட இறுதிக்குள் நடைபெறுமென உறுதியாக அறியமுடிந்தது.

1 comment:

  1. மஹிந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொலைகள், கொள்ளைகள், ஆள் கடத்தல்கள் என அடுக்கிக் கொண்டு செல்லக்கூடிய அனைத்தும் கிடப்பில் கிடக்கின்றது.

    அவற்றுக்கு தீர்ப்பு சொல்ல முடியாத, தீர்மானம் எடுக்க முடியாத முள்ளந்தண்டு அற்ற My3. பிணைமுறி விவாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க போறாராம். இதை வேண்டுமானால் 2018ஆம் ஆண்டுக்கான பகிடியாக எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.