ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணை : சி.ஐ.டி.யிடம் கையளிக்க உத்தரவு.!
ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி.யிடம் கையளிக்க ஒழுங்கு செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி, மேற்படி படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத்துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு விசாரணை பாதிக்கப்பட்ட தமது தரப்புக்கு திருப்தியில்லாதிருப்பதாக, அவர் தனது வேண்டுகோளை சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (சி.ஐ.டி) கையளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்கை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
படுகொலைச் சந்தேக நபர்களில் இருவர், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை, பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி, முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56), அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 ஆம் வருடம் செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில், அவர்களில் இருவர் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திலும் மற்றைய இருவரும் ஒக்டோபர் மாதத்திலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment