Header Ads



மகிந்த அணிக்கு, அணிக்கு ஆப்பா..?

மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது, தமது கட்சியைச் சாராத அரசியல்வாதிகளின் படங்களை அரசியல் கூட்டங்களிலோ, கட்சி பணியகங்களிலோ பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடந்த நடந்த கலந்துரையாடலின் போதே, தமது கட்சியைச் சாராத அரசியல்வாதிகளின் படங்களை பரப்புரைகளின் போது, பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தமது கட்சியின் தலைவரின் படங்களைப் பயன்படுத்தவே அனுமதி அளிக்கப்படும்.தமது கட்சியின் உறுப்பினர் அல்லாத அல்லது இன்னொரு கட்சியின் உறுப்பினரான எவரினதும் படங்களை வேட்பாளர்கள் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது.” என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியைச் சேர்ந்த தேசிய மட்ட தலைவர்களின் படங்களை மற்றொரு கட்சியின் வேட்பாளர்கள் தமது பரப்புரைக்காக பயன்படுத்துவது குறித்த சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் எழுப்பிய கேள்வியை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இந்தக் கலந்துரையாடலில் ஜேவிபி சார்பில் பங்கேற்ற சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தமது கட்சியின் தலைவர்களின் படங்களை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளின் படங்களைப் பயன்படுத்தும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள், அந்தக் கட்சியின் உறுப்பினரல்லாத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான மகிந்த ராஜபக்சவின் படங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியினர், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிசின் படங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.