"பலஸ்தீன் நிலைமை, நாளை இலங்கைக்கும் ஏற்படலாம்.."
அமேரிக்க, இஸ்ரேல் தலைமைகளை திருப்திப்படுத்த முனைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பலஸ்தீனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கும் ஏற்படலாம் என்பதை மறந்து விட்டார் என உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜயதிலக டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை தொடர்பில் அரசாங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் மீதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளமைக்கு, ‘உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள்’ ஒன்றியத்தின் தலைவர் ஜயதிலக டி சில்வா பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குறித்த அறிவிப்புக்கு எதிராக உலக நாடுகள் தமது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்யாத பட்சத்தில் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் இறையாண்மை, சுய நிர்ணய உரிமை என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதை சரத் வீரசேகர கருத்திற்கொள்ள மறந்துள்ளார்.
எமது நாடு இக்கட்டான தருணத்தில் சிக்கியிருந்தபோது பலஸ்தீன் எமக்கு ஆதரவாக தோள் கொடுத்திருந்தது. பலஸ்தீன நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான இத்தருணத்தில் நாம் அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பது தேசிய நலன் சார்ந்த ஒரு விடயம் என்பதை அரசியல் கற்றுக்குட்டிகள் கூட அறிந்திருக்க வேண்டிய ஒரு விடயம்.
2001 பெப்ரவரி தொடக்கம் 2011 நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தொடர்பான 30/1 ஜெனீவா தீர்மானத்தை விட அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்குமாறு முன்னுரிமை வழங்கப்பட்டது ஏன் என சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த இரண்டு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையும் ஒப்பிட முடியாதவையும் ஆகும்.
இரண்டு, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களின்போது சர்வதேச சமூகத்தின் பொறுப்புள்ள ஒரு அங்கத்துவ நாடு எனும் வகையில் இலங்கை ஒரு காத்திரமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். தீர்க்கமான நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் தருணம் அநீதிக்கு எதிராக நீதியையும், அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்தையுமே கருத்திற்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொண்டு ஏனைய நாடுகளைப் பின்பற்ற வேண்டிய தேவையோ , ஒரு சில டொலர்களுக்காக அதிகார சக்திகளிடம் மண்டியிட வேண்டிய தேவையோ இலங்கைக்கு இல்லை.
பெரும்பான்மையான ஐ.நா. அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களித்துள்ளன. இவ்வகையில், இலங்கையின் நிலைப்பாடும் பெரும்பான்மை ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் நிலைப்பாடும் ஒத்துப்போகின்றமையால் அவற்றின் நன்மதிப்பை இலங்கை சம்பாதித்துக் கொண்டுள்ளது. இலங்கையின் நிலைப்பாடானது குறித்த ஒரு தனிநபருக்கோ அல்லது குறித்த ஒரு நாட்டுக்கோ எதிரான நிலைப்பாடு அல்ல; மாறாக அநீதிக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்.
இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் குற்றம் சாட்டுவதன் மூலம் சரத் வீரசேகர, இஸ்ரேலின் அநீதியான நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தனிமைப்படுத்தப்பட்ட கூட்டத்துடன் இணைந்து கொள்கிறார்.
இவ்விவகாரம் தொடர்பில் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடும் சரத் வீரசேகரவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகிறதா என்பதை கூட்டு எதிரணியினர் தெளிவுபடுத்துவது அவசியமானதாகும்.
.... நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 49:9)
www.tamililquran.com