அநுராதபுரத்தில் மயில், தனித்துப் போட்டி - ருஷ்தி ஹபீப் அறிவிப்பு
அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று காலை (12) அநுராதபுர மாவட்ட செயலகத்திலும், புத்தளம் மாவட்ட செயலகத்திலும் கட்டுப்பணத்தை செலுத்தியிருப்பதாக, அக்கட்சியின் அரசியல் அமைப்பு சட்ட விவகாரப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை, கொட்டிகஹவத்தை பிரதேச சபை, கொலன்னாவை பிரதேச சபை ஆகியவற்றிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், இன்று பிற்பகல் அந்தந்த மாவட்ட செயலகங்களில் கட்டுப்பணத்தை செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச சபைகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று செலுத்தியுள்ளது.
இது இவ்விதமிருக்க அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனநாயக சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கிய “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில்” மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment