Header Ads



பலஸ்தீன சுதந்திர போராட்டத்துக்கு, தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் - ஜனாதிபதி

பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் பலஸ்தீன தூதரகத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் காணித்துண்டு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

இதற்கு நன்றி தெரிவித்து பலஸ்தீன அதிகாரசபையின் அதிபர் மஹ்முட் அப்பாஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே, பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பில் பலஸ்தீன தூதரகத்தை அமைப்பதற்கு காணித்துண்டு ஒன்றை வழங்கியது, எங்கள் நீண்டகால நட்புறவுகளின் மற்றொரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பலஸ்தீன மக்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகள் மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களுக்கு அமைய ஒரு சுதந்திரமான, இறையாண்மை அரசை உருவாக்குவதற்கான அவர்களின் உரிமையை சிறிலங்கா தொடர்ந்து ஆதரிக்கிறது.

இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக பலஸ்தீன அரசுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பேணிக் கொள்வதற்கு சிறிலங்கா உறுதிபூண்டுள்ளது” என்றும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.