மன்னிப்பு கேட்கிறது அப்பிள், பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்காக 8 வழக்குகள்
புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும், குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் பேட்டரிகளை மாற்றித் தருவதாகவும், 2018ல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களின் பேட்டரி திறனை அறிந்துக் கொள்ளும் வகையில் மென்பொருள் வசதி ஒன்றை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
தனது வாடிக்கையாளர்களினுடைய சாதனங்களின் "ஆயுளை நீட்டிக்க வேண்டுமென" நினைப்பதால் சில பழைய ஐபோன்களின் இயக்க வேகத்தை குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஐபோன் 6 அல்லது அதற்கு அடுத்த பதிப்பு ஐபோன்களை வாங்கியவர்களுக்கு, உத்தரவாத காலத்திற்கு பிறகான பேட்டரியின் விலையை 79 டாலர்களிடமிருந்து 29 டாலர்களாக குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் அடைந்துள்ளவர்களின் "கவலையை போக்கவும்" மற்றும் ஆப்பிள் மீதான அவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
"ஆப்பிளை பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கை என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, அதை தொடர்ந்து பெறுவதற்கும், பராமரிப்பதற்குமான எங்களது செயற்பாட்டை என்றைக்கும் நிறுத்தமாட்டோம். எங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே நாங்கள் விரும்பும் வேலையை எங்களால் செய்ய முடிகிறது என்பதால் அதன் மதிப்பை என்றைக்கும் மறக்கமாட்டோம்."
இந்த விடயத்தில் ஆப்பிளுக்கு எதிராக அமெரிக்காவில் எட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் மற்றும் பிரான்சிலும் சட்ட நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தான் பழைய பதிப்பு ஐபோன்களின் இயக்க வேகத்தை வேண்டுமென்றே குறைப்பதை இந்த மாத தொடக்கத்தில் ஒப்புக் கொண்டது.
சில பழைய பதிப்பு ஐபோன்களிலுள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் பழையதாவதால் அதன் செயல்திறன் காலப்போக்கில் குறைவதை தடுப்பதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"லித்தியம்-அயன் பேட்டரிகள் குளிர் நிலைகளில் குறைந்த அளவு சார்ஜ் இருக்கும்போது அல்லது காலப்போக்கில் பழையதாவதால் உச்ச அளவு மின் தேவை இருக்கும்போது சரிவர இயங்க இயலாமல் மின்னணு பாகங்களை காப்பதற்காக சாதனத்தின் இயக்கத்தையே நிறுத்திவிடுகிறது" என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Post a Comment