மைத்திரியின் வாள் வீச்சும், தீர்க்கமான டிசம்பர் 31 உம்
-நஜீப் பின் கபூர்-
சமகால அரசியல் வரலாற்றில் 2017 திசம்பர் 31 தீர்க்கமான ஒரு நாளாக இருந்து வருகின்றது. இன்று அந்த நாள்.! நாட்டின் அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்கின்ற தனது புனிதப் பணியின் போது தான் நடாத்துகின்ற வாள் வீச்சினால் யார் தலை எல்லாம் உருளப்போகின்றதோ அது எனக்குத் தெரியாது. எனது வாள் வீச்சுக்கு எனது உறவுகள் நண்பர்கள் என்று எவர்தான் பலியானாலும் நான் அது பற்றி ஒரு போதும் கவலைபடப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரி சில தினங்களுக்கு முன்னர் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
அவரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருக்கின்றது. முன்பு தானும் ஊழல் மோசடி செய்து தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதனை செய்ய வழிகாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட தற்போது ஊழல் மோசடிக்குத் தானும் இடம் கொடுக்கப்போவதில்லை என்று கர்ச்சித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
இந்த முறை தான் எக்காரணம் கொண்டும் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகின்ற உறுப்பினர்களுக்கு அந்த சபைகளில் அபிவிருத்திப் பணிகளைச் செய்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்போவதில்லை என்று பகிரங்கமாகப்பேசி வருகின்றார் அவர்.
பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை நாட்டில் பெரும் அரசியல் அதிர்வலைகளை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி எடுக்கின்ற நடவடிக்கை மஹிந்த காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும்.
இதற்கிடையில் இந்த பிணைமுறி விவகாரத்தில் பதவியிழந்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க இந்த அறிக்கை தன்னை ஒரு நிரபராதி என்று நிரூபிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். இதேபோன்றுதான் இந்த ஆணைக்குழு முன் ஆஜராகிய போதும் அவர் அங்குபோய் தான் குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டு வந்திருக்கின்றேன் என்று பெரிய பத்திரிகையாளர் மா நாடு நடாத்தி கூப்பாடு போட்டிருந்தார் என்பது மக்களுக்கு ஞாபகம் இருக்கும்.
தனது கையில் கிடைத்திருக்கின்ற இந்த அறிக்கையைப் படித்துவிட்டு அதனை சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபருக்கு இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கையளிக்க இருக்கின்றார் என்று எமக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதே வட்டாரங்கள் இந்த தேர்தல் நடக்க இருக்கின்ற நேரத்தில் அந்த அறிக்கையிலுள்ள தகவல்களை வெளியில் வராமல் தடுக்க ஜனாதிபதிக்கு அலுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. எனவே தான் அதற்கு முன்னர் வாள் வீச்சு கதையைக் கூறி அப்படி அலுத்தம் கொடுக்க முனைவோருக்கு ஜனாதிபதி மைத்திரி பதில் கொடுத்திருக்கின்றார் என்று நாம் கருதுகின்றோம்.
இதற்கிடையில் இந்த ஜனாதிபதியின் வாள் வீச்சுத் தொடர்ப்பில் ஊடகங்கள் அமைச்சர் ஹெரிசனிடம் கேட்ட போது, இது ஜனாதிபதி எங்களுக்குச் சொன்ன கதை அல்ல இது ராஜபக்ஷாக்கள் ஊழல் பற்றி ஜனாதிபதி மைத்திரியின் வழக்கமான கதை என்று அவர் அங்கு மலுப்பி இருக்கின்றார். ஆனால் இது மஹிந்த தொடர்பான கதை என்பதை விட தனது தலைமையின் கீழ் நடக்கின்ற நல்லாட்சி ஊழல் பற்றிய கதை என்பது மிகத் தெளிவாகின்றது. எனவேதான் உறவுகள் நண்பர் என்று அவர் திட்டவட்டமாக அங்கு பேசி இருக்கின்றார்.
அத்துடன் இந்த நல்லாட்சியின் குடித்தனம் 2017 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்திருக்கின்றது. தனது முயற்சியால் அதனை ஜனாதிபதி 2017 திசம்பர் வரை தள்ளிப்போட்டிருக்கின்றார். எனவே நாளை முதல் புதிய உடன்பாடு நல்லாட்சியை முன்னெடுக்க செய்து கொள்ள வேண்டும். எமக்குத் தெரிகின்ற வகையில் இந்த தேர்தல் முடியும் வரை புதிய உடன்பாடு ஏதும் இல்லாது இந்தப் பயணம் போக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
என்றாலும் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சி சபைகளை அமைக்கின்ற போது அனேகமாக அது மைத்திரி - மஹிந்த அணிகள் இணைந்த சபைகளாகவே அமையும் என்று நாம் கருதுகின்றோம.; இதற்கு சுதந்திரக் கட்சியிலுள்ள இரு குழுக்களும் தமது பூரண சம்மதத்தை ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றன. இதனை மீறி உள்ளுராட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அமையுங்கள் என்று கூறும் நிலையில் ஜனாதிபதி மைத்திரியும் இல்லை என்பது எமது கணிப்பு.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த ஊழல் பேர்வழிகள் விடயத்தில் இரு குழுக்கள் இருக்கின்றன. ஒன்று பண மோசடிக்காரர்களினால் கொடுப்பனவு பெற்றுவந்த தரப்பு. இதில் நிதி நெருக்கடியான ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அடுத்து இந்த நாட்டில் மைத்திரி முன்னெடுக்க முனைகின்ற நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டை நல்ல வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சஜித் பிரேமதாச அணி. இந்த இரு அணிகளுக்குமிடையே அந்தக் கட்சியில் தற்போது பனிப்போரொன்று திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றது.
அதே போன்று மைத்திரி முன்னெடுக்க முனைகின்ற நல்லாட்சிக்கு தாங்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு பலமான அணி சுதந்திரக் கட்சியிலும் இருக்கின்றது. இந்த நல்லாட்சியில் இருக்கின்ற மைத்திரி தரப்பிலுள்ளவர்கள் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்ற தகவல்கள் கிடையாது.
எனவே இந்த நல்லெண்ணத்தை வைத்துக் கொண்டு ஒரு புதிய அரசை இந்தத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது. இந்தத் தேர்தலில் மைத்திரி தலைமையிலான அணி நாம் முன்பொரு இடத்தில் சொல்லி இருப்பது போல் ஒரு 15 அல்லது 20 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமாக இருந்தால் இது சாத்தியம்.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக் குழுவில் இருந்து விஜேதாச ராஜபக்ஷ வெளியேறி இருக்கின்றார். இது சிங்கள மக்களை உசுப்பி விடுகின்ற ஒரு நடவடிக்கையே.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகின்ற 2ம் திகதி மொட்டுக்கள் அணி நடாத்துகின்ற மா நாட்டில் வைத்து முக்கிய செய்தி ஒன்றை நாட்டுக்குச் சொல்ல இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. எப்படியும் 2018 முற்பகுதி நாட்டில் அரசியல் அனல் பறக்கின்ற காலப்பகுதியாக இருக்கும். இது பல அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கின்ற நாட்களாகவும் இருக்கும்.
ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார்.
ReplyDelete'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.
முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள்.
உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.'
அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு:
'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த இந்த ஹதீஸ், ஸஹீஹ் புகாரி அத்தியாயம் 3ல் பதிவாகியுள்ளது.