முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு - தலதா தலையீடு
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு அங்கத்தவர்களிடையே இரு வேறுபட்ட முரண்பாடான கருத்துகள் இருந்தால் அவற்றை அறிவியுங்கள். இரு வேறுபட்ட அறிக்கைகளையும் சமர்ப்பியுங்கள் என தலதா அத்துகோரள வேண்டிக் கொண்டார். அவை தொடர்பில் நீதியமைச்சு ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் தனியார் சட்டதிருத்த சிபார்சுக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியமைச்சர் சலீம் மர்சூபை வேண்டிக் கொண்டார்.
குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளை நீதியமைச்சர் தலதா அத்துகோரள நேற்று முன்தினம் மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபார்சு பணிகளின் தாமதம் அதற்கான காரணம் தொடர்பில் கலந்துரையாடினார்.
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் விளக்கமளித்தார்.
சட்டத்திருத்த சிபார்சுக் குழு தனது அறிக்கையை ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும் அறிக்கையில் குழு அங்கத்தவர்களின் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடந்த 26 ஆம் திகதி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் குழு அங்கத்தவர்களில் சிலர் கையொப்பமிட்டு வேறோர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். அவ்வறிக்கை, குழு ஏற்கனவே தயாரித்திருந்த அறிக்கையின் சிபார்சுகளுக்கு முரண்பட்டுள்ளன. தற்போது இரு அறிக்கைகள் குழுவிடம் இருக்கின்றன என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் தலதா அத்துகோரள ‘இரு முரண்பாடான கருத்துகள் கொண்ட அறிக்கைகள் இருந்தால் பிரச்சினையில்லை. அவற்றைச் சமர்ப்பியுங்கள். நீதியமைச்சு அறிக்கைகளை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றார்.
மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் 7 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். இவ்வாறு கையொப்பமிட்டவர்களில் பலர் கடந்த குழுவின் அமர்வுக்கு சமுகமளிக்கவில்லை. அதனால் அந்த சிபார்சுகள் தொடர்பில் அன்று ஆராயப்படவில்லை. குழு ஏற்கனவே தயாரித்துள்ள அறிக்கையை சிலர் ஏற்றுக் கொள்ளாததினாலே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அறிக்கை ஷரீஆவுக்கு முரணானது என்கிறார்கள்.
இதேபோன்ற பிரச்சினை 1959 ஆண்டிலும் ஏற்பட்டது. சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு 1959 ஆண்டு நியமிக்கப்பட்ட குழுவிலும் முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகளை வெளியிட்டதால் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படவில்லை. ஆனால் ஏனைய இனங்களின் சட்டங்கள் திருத்தங்களுக்குள்ளாகின.
குறைந்த எண்ணிக்கையிலான உலமாக்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை என்கிறார்கள். ஆனால் நளீமியாவில் பயின்றவர்கள் போன்ற உலமாக்கள் சட்டத்தில் காலத்துக்கேற்ற திருத்தங்கள் தேவை என்கிறார்கள்.
குழு அங்கத்தவர்களிடையே –முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இரு அறிக்கைகள் தயாராக இருந்தாலும் முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையாக தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகிறது. சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் பலர் எம்முடன் கலந்துரையாட வருகிறார்கள். ஜமாஅத்தே இஸ்லாமி வெள்ளிக்கிழமை (இன்று) எம்மைச் சந்திக்கிறார்கள்.
இரண்டு காரணங்களினாலே குழுவின் அமர்வுகள் சிறிது காலதாமதப்படுத்தப்பட்டன. பொதுபலசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை உக்கிரமடைந்திருந்த நிலையில் நாம் தாமதமானோம். அடுத்து 2014 இல் நான் சுகயீனமாக இருந்தபோது சிறிது தாமதமானதேயன்றி வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
கருத்து முரண்பாடுகள் கொண்டுள்ள குழு அங்கத்தவர்கள் இது விடயத்தில் ஒன்றுபடாது விடின் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
Post a Comment