10 நாட்களாக படுக்கையில் கிடக்கிறேன் - கெஹெலிய ரம்புக்வெல்ல
நான் கடந்த 10 தினங்களாக சுகவீனமுற்று படுக்கையில் கிடக்கின்றேன். இந்நிலையில் எவ்வாறு நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார்.
மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அதேபோன்று மக்களின் செல்வாக்கை இழந்துகொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துடன் நான் இணைந்துகொள்ளமாட்டேன் என்றும் கெஹெலியரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவம் செய்யும் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணைந்து ஊடகத்துறை இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து வினவியபோதே அவர் இந்த விடயங்களை கூறினார். இதுதொடர்பில் கெஹெலியரம்புக்வெல்ல கேசரிக்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;
நான் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப்போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு நான் இணைந்துகொள்ள போவதில்லை. மேலும் நான் ஜனாதிபதியை சந்திக்கவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நான் கடந்த 10 நாட்களாக சுகவீனமுற்று படுத்த படுக்கையில் இருக்கின்றேன். இன்றுதான் ( நேற்று) சற்று குணமடைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றேன். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக படுக்கையில் இருந்த நான் அரச தரப்புடன் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதுமட்டுமன்றி எந்தவொரு மனிதனும் மூழ்கிக்கொண்டிருக்கின்ற கப்பலில் ஏறப்போவதில்லை.
அதேபோன்று மூழ்கிகக்கொண்டிருக்கின்ற கப்பல்போன்று காட்சியளிக்கின்ற அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் எண்ணம் எனக்கில்லை இதனை நான் மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன். அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றது.
கடந்த தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன் உள்ளனர். அந்த விடயத்தை வைத்தே நாங்கள் தேர்தலில் ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில் இணைந்துகொள்வேனா என்று கேள்வி எழுப்பினார்.
அவுஸ்ரேலியா போய் மருத்துவம் செய்திருக்கலாமே. அவ்வாறு போனால் சனாதிபதி நிதியிலிருந்து மீண்டும் இன்னும் ஒரு 1500 மில்லியன் மக்கள் பணத்தைச் சுருட்ட ஒரு ரை பண்ணலாம்தானே.
ReplyDelete