மட்டக்களப்பில் புதிய உள்ளுராட்சி சபைகளை ஸ்தாபிக்க TNA முயற்சி
மாவட்ட பதில் அரசாங்க அதிபரின் பத்திரிகை அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிய சபைகளை ஸ்தாபித்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு அறிக்கை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களில் தரமுயர்த்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகள் மற்றும் புதிதாக உள்ளூராட்சி சபைகளாக மாற்றப்பட வேண்டிய பிரதேசங்கள் தொடர்பில் இம்முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாரிய கலந்துரையாடல்களின் பின்னர் இவ்வறிக்கை தொகுக்கப்பட்டுள்ளதுடன், எம்மால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள் நிறைவேறும் பட்சத்தில் பல பிரதேசங்கள் முன்னேற்றங்களை காணக்ககூடியதாக இருக்கும்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் தொகுதிகள் பிரிப்பு தொடர்பிலான முன்மொழிவு அறிக்கையும் இன்றைய தினம் மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழுவிற்கு (கொழும்பு) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண அமைச்சர், மாகாணசபைப் பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்டு இவ்விரு முன்மொழிவு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment