ஐ.தே.கவுடன் ஹெல உறுமய, றிசாத், ஹக்கீம் இணைந்து போட்டி
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
இதற்காக தமது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஐ.தே.க. ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
2018 ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சிறுகட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணியாக களமிறங்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதன்படி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன யானை சின்னத்தின்கீழ் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இந்நிலையிலேயே ஹெல உறுமயவும் புதிதாக இக்கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளது.
இதற்காக தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட 75 வீதமான கோரிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஏற்றுள்ளது என்றும், எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான செயற்பாட்டில் தாம் இறங்கியுள்ளதாகவும் நிஷாந்த கூறினார்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை வவுனியா, திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களில் மட்டும் தமது வேட்பாளர்களை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment