மஸ்கெலியாவில் இருவரை காணவில்லை, பிரதேசத்தில் பதற்றம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இத்தோட்டத்தில் வசித்து வந்த அண்ணன், தங்கை இருவர் காணாமல் போனாது தொடர்பாக இந்த பதற்ற நிலை இன்று காலை முதல் நிலவி வருகின்றது.
கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (19) ஆகிய மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களின் தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக கடந்த 23ம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்துள்ளனர்.
கடந்த 25.11.2017 அன்று குறித்த விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வருகை தந்த இவர்கள் கடந்த 26ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று உறவினர்களால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனது தொடர்பாக பொலிஸில் முறைபாடு செய்து விட்டு வருவதாக கூறிச்சென்ற இவர்கள் காணாமல் போயிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றிற்கு அருகில் ஆள்ளில்லாமல் காணப்படுவதாக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சிலரால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் இன்று காலை ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மோப்ப நாயையும் ஈடுப்படுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸ் மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதையடுத்து இவர்கள் இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டது.
அதேவேளை, காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படும் மேற்படி யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆகியன ஆற்றுப்பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் காணப்படுவதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இவர்கள் ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. இவர்கள் குளிக்க சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க குறித்த ஆற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கென கொழும்பிலிருந்து சுழியோடிகள் மற்றும் கடற்படையினர்களின் உதவிகளையும் மஸ்கெலியா பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடதக்கது.
காணாமல் போன இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் எனவும், இவர்களின் தந்தையர்கள் இருவர் என குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமையும் மேலும் குறிப்பிடதக்கது.
Post a Comment