Header Ads



தேன்நிலவு முடிகிறதா...?

நல்லாட்சியின் கூட்டுக்குள் ​பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது.   

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.   

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தால் மட்டுமே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமென்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

சுதந்திரக்கட்சி அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தால், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் கைகோர்த்துக்கொண்டு, புதிய கூட்டணியை உருவாக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக, அத்தகவல் தெரிவிக்கின்றது.   

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் வகையிலேயே கருத்துகளைக் கூறியுள்ளதாக அறியமுடிகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பிலான இரகசியப் பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லையெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.   

இது இவ்வாறிருக்கையில், இவ்வாறான புதிய கூட்டணியில், ஜே.வி.பியையும் இணைத்துக்கொள்ளவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவென அறியமுடிகின்றது. எனினும், அதனை இரு பக்கத்திலும் உறுதிப்படுத்த முடியவில்லை.   

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிட்டால், அரசாங்கத்திலிருந்து சு.க விலகவேண்டுமென, ஐ.தே.கயினர் பகிரங்கமாகக் ​கருத்துத் தெரிவித்துவருகின்றமையை அடுத்தே, இவ்வாறான புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.  

No comments

Powered by Blogger.