பிரான்சு விடுத்த அழைப்பினை ஏற்ற, லெபனான் பிரதமர்
லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதனை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.
இதனை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹரிரி சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் சில நாட்களில் நான் லெபனான் திரும்புவேன். வளைகுடாவில் நூற்றுக்கணக்கான லெபனானிய மக்களுடைய வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன என கூறினார்.
இந்நிலையில் டுவிட்டரில் நேற்று முன்தினம் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெபனான் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ள ஹரிரி, இன்னும் 2 நாட்களில் லெபனானுக்கு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சவூதி அரேபியாவில் ஹரிரி கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் ஆன் கூறினார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் நேற்று பிரான்ஸ் நாட்டு வெளியுறவு துறை மந்திரி ஜீன்-ஒய்வெஸ் லே டிரையன் பேசினார். இந்த நிலையில், லெபனான் பிரதமர் ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்துள்ளது. இதுபற்றி டிரையன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பிரான்சுக்கு ஹரிரி வருவார். இளவரசருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
ஹரிரி என்று பிரான்ஸ் வருகை தந்து அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சு நடத்துவார் என கேட்டதற்கு பதிலளித்த டிரையன், ஹரிரி வருவது பற்றிய விசயத்தினை அவரே முடிவு செய்வார் என கூறினார்.
Post a Comment