பௌத்த துறவிகள் அதிகளவிலானோர் இனவாதத்தை பரப்புகின்றனர் - சந்திரிகா
நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தினால் மாத்திரம் முடியாது. இதற்காக சகல இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அத்துடன் 2013ஆம் ஆண்டில் நாட்டில் மதவாதம் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பௌத்த துறவிகள் என்று சொல்லக்கூடியவர்களே நாட்டில் பல்வேறு இடங்களில் இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "ஒற்றுமையில் வேற்றுமையே தேசத்தின் பலம்" என்னும் தொனிப்பொருளில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் சகவாழ்வும் எமது நாட்டிற்கு அத்தியாவசியமான விடயங்கள். எமது நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப நான் என் வாழ் நாளில் அரைவாசிப் பகுதியையும் கழித்துள்ளேன். பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளேன்.
எமது நாடு சிறியதொரு வளமானதொரு நாடு. கலாசாரத்திலும் நாகரிகத்திலும் உன்னதமானதொரு வரலாற்றை கொண்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு அதிக காலம் தொட்டு சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள். அதன் பின்னர் பல்வேறு இனங்கள் இங்கு வந்துள்ளன. பல தசாப்தங்களாக எவ்வித பிளவுகளும் இன்றி நாம் ஒற்றுமையாக வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
தென் இந்தியாவில் பல்வேறு ராஜ்ஜியங்கள் காணப்பட்டன. அங்கிருந்து பல்வேறு அரசர்களும் இங்கு வந்து எமது நாட்டை கைப்பற்றப்பார்த்தார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற நாம் எல்லோரும் போராடியுள்ளோம். ஒரு காலத்தில் எமது நாட்டில் 3 ராஜ்ஜியங்கள் காணப்பட்டன. ஒன்றுபட்ட தேசம் 3 பகுதிகளாக பிளவுபட்டிருந்தது. அதன் பின்னர் வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டை ஆண்டன. எல்லா இனத்தவர்களும் ஒன்றுபட்டு சுதந்திரத்தை வென்றெடுத்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிந்திய காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கு மத்தியில் பிளவுகள் அதிகரிக்கலாயின. பிற்பட்ட காலத்தில் கடும்போக்குவாத தீவிர மதவாத சக்திகளின் தாக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக 30 வருட யுத்தமும் வெடித்தது. சந்தர்ப்பவாத அரசியலை முன்னிலைப்படுத்தியே இனவாதம் அரங்கேற்றப்படுகின்றது.
என்றாலும் இந்நாட்டில் பெரும்பான்மையின மக்கள் இதற்கு எதிராகவே இருக்கின்றனர். 2013ஆம் ஆண்டிலேயே மதவாதம் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பௌத்த துறவிகள் என்று சொல்லக்கூடியவர்கள் அதிகளவிலானோர் நாட்டில் பல்வேறு இடங்களில் இனவாதத்தை பரப்பி வருகின்றனர். என்றாலும் பெரும்பாலான தேரர்கள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஆனால் அவை ஊடகங்களில் வருவதில்லை. சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் இலங்கையை முன்னுதாரணமாக கொண்டு அன்று அந்நாட்டை கட்டியெழுப்பினார். ஆனால் இன்று எமது நாடு மதவாத கடும்போக்குவாத அரசியலால் இருள் யுகத்தை நோக்கிச் சென்றுள்ளது.
அதனை மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. புதிதாக இதற்கு அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் எல்லாம் இன்று 70 வருடங்களின் பின்னர் ஒன்றுபட்டுள்ளன. இதுவே நல்லிணக்கத்திற்கான அடித்தளம். எனவே நாம் எல்லோரும் ஒன்று பட்டு முன்செல்ல வேண்டும். எமது நாட்டிற்கு சமூக, பொருளாதார அபிவிருத்தி அவசியம். முன்னேற்றகரமான கலாசார முறைகள் அவசியம். இந்நிலைக்கு செல்வதற்கு வரலாற்றிலிருந்து பாடம் கற்று செயற்பட வேண்டும். அரசாங்கத்திற்கு மாத்திரம் இப்பணியை செய்ய முடியாது. தேசிய நல்லிணக்க அலுவலகம் இது தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த 11 வருட காலமாக நாம் இதனை செயற்படுத்தி வருகின்றோம். 2 இலட்சத்திற்கும் அதிக மாணவர்கள் இதில் பிரயோசனம் பெற்றுள்ளனர். வடகிழக்கு பகுதிகளில் இதன் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே சகலரினதும் பங்குபற்றுதலும் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டின் பெரும்பாலான மக்கள் தேசிய நல்லிணக்கம் தேவையென கூறுகின்றார்கள். சிறியதொரு கூட்டத்தினர் மாத்திரமே இனவாதத்தை விதைக்கிறார்கள். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முன்னேறிச்செல்ல வேண்டும் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
Post a Comment