நாட்டிலிருந்து நான் தப்பியோடவில்லை, பாராளுமன்றில் பைசர் தொடர்பில் சூடான விவாதம்
அரசாங்கத்துக்குத் தெரியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பதாக தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை நேற்று(27) சபையில் முழுமையாக மறுத்த அமைச்சர் பைசர் முஸ்தபா,
அமைச்சரவை மற்றும் ஜனாதிபதியின் அனுமதியுடனே, தான் மோல்டாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதாக விளக்கமளித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காகவே தேர்தலை ஒத்தி வைக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் அதற்கு தான் உடந்தையாக செயற்பட்டதாகவும் தன் மீது அநுர குமார திசாநாயக்க எம்.பி சுமத்தியுள்ள குற்றச்சாட்டையும் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று சபையில் வன்மையாக கண்டித்தார்.
அத்துடன் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் பூரணமானது என்றும் அதில் எவ்வித குறைபாடுகளும் இல்லையெனவும் சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் சபையில் பகிரங்கமாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று(27) அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும், அநுர குமார திசாநாயக்க எம்.பிக்கும் இடையில் நேற்று சபையில் சில நிமிடங்கள் கடும் விவாதம் இடம்பெற்றது. இந்த வாக்குவாதங்களுக்கிடையே தினேஷ் குணவர்தன எம்.பி மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன எம்.பி ஆகியோரும் இடைக்கிடை எழுந்து அமைச்சர் பைசர் முஸ்தபாவை கடுமையாக சாடினர்.
நான் எவருக்கும் கூறாது நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக அநுர குமார திசாநாயக்க எம்.பி பாராளுமன்றத்தில் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். நான் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் நான் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதியின் அனுமதியுடனேயே மோல்ட்டாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தேன் என்பதனை அவருக்கு சபையில் கூறிக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பேரவை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடக்க இருப்பதால் அதற்கான அழைப்பை ஏற்ப்பதற்காகவே தற்போது மோல்டாவில் நடைபெற்று வரும் பேரவையில் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா சபையில் விளக்கமளித்தார்.
சட்டத்துறையில் 20 வருடங்களாக கடமையாற்றி வரும் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி என்ற வகையிலும், அமைச்சரவை அமைச்சர் என்ற வகையிலும் நான் எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துக்கு தெரியாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
ஜனவரியில் தேர்தல் என்று அறிவித்ததும் ஜே.வி.பியினர் கலங்கிப் போய்விட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன் காரணமாகவே நீதிமன்ற வழக்கை பைசர் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு, முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு என்றெல்லாம் சேறு பூசுவதாகவும் சபையில் அவர் கூறினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது- வழக்கு தொடருவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தால் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாம் நீதிமன்றத்தை மீறி எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க இயலாது. இதற்காக திட்டமிட்டு என் மீது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
நான் வர்த்தமானியில் மோசடி செய்யவில்லை என்பதை சட்டமா அதிபரே உறுதி செய்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளுக்கு நியாயம் கிடைப்பதற்காகவே நான் இவ்வாறு செயற்பட்டேன்.என் மீது சுமத்தப்படும் அநாவசியமான குற்றச்சாட்டுக்களுக்காக நான் மக்கள் நீதிமன்றம் செல்லத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment