Header Ads



ரோஹின்யர்களுக்கு எதிரான ராணுவ, நடவடிக்கையை நிறுத்த ஐ.நா. வலியுறுத்தல்


மியான்மரில் ரோஹிங்கயாக்கள் வசித்து வரும் ராக்கைன் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வரும் தேடுதல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது: 

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் ஆயத்தமாக உள்ளன. ஐ.நா. அமைப்புகளுக்கு மியான்மர் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், ராக்கைன் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதற்கான நடவடிக்கைகளை அரசு தாமாக முன்வந்து எடுக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடன் வாழும் சூழலை மியான்மர் அரசு ஏற்படுத்த வேண்டும். 

ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். நாட்டில் இயல்பு நிலை திரும்ப மியான்மரின் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவது நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வருவோருக்கு உதவிப் பொருள்கள் வழங்கத் தனி அமைப்பை உருவாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், உதவிப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட மனித நேய நடவடிக்கைகளில் ஐ.நா. அமைப்புகளுக்கு இணையாக வேறு எந்த அமைப்பும் செயல்பட முடியாது. எனவே, ஐ.நா. உதவிக் குழுக்கள் ராக்கைன் மாகாணப் பகுதிகளில் உதவி அளிக்க மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டும்.

தங்கள் இருப்பிடங்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் அளித்து வரும் வங்கதேசத்தின் மனித நேய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பாராட்ட கடமைப்பட்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கயா விவகாரத்தில் மியான்மருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரிட்டனும் பிரான்ஸும் வலியுறுத்தியபோதிலும், மியான்மரின் நட்பு நாடான சீனா அதனை எதிர்த்து வாக்களிக்கும் என்பதால், அறிக்கை மட்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அங்குள்ள ராணுவ முகாம் மீது ரோஹிங்கயாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ராக்கைன் மாகாணம் முழுவதும் தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் மேற்கொண்டனர். அப்போது வன்முறை, தீவைப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அந்த 6 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயாக்கள் மியான்மரைவிட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments

Powered by Blogger.