Header Ads



உலகில் காணப்படும் எந்த நூலையும்விட, அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் - அறிஞர் சார்லஸ்


உலக மக்கள் யாவருக்கும் பொது வேதமாகிய திருக்குர் ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு பிரகடனம் செய்கிறது. "உலக மக்கள் அனைவருக்கும் இது ஒர் நல்லுரையே அன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 68:52)

சார்லஸ் ஃபிரான்ஸிஸ் எனும் மேல் நாட்டறிஞர் கூறுகிறார், ‘உலகில் காணப்படும் எந்த நூலையும் விட மிக அதிகமாக ஓதப்படும் நூல் அல்குர்ஆன் ஒன்றேயாகும்.

கிறிஸ்தவ பைபிள் உலகின் மிக அதிகமான விற்பனையைக் கொண்ட நூலாக இருக்கலாம். எனினும் இறைத்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் செல்லும் கோடிக்கணக்கான மக்கள் அதை (திருக்குர்ஆனை) கவனமாகப் படித்து, மனனமிட்டு – அதன் நீண்ட பகுதிகளை தினமும் தமது ஐவேளைத் தொழுகைகளில் ஓதி வருவது நம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியை ஏற்று வாழ்வோர், பேசும் சக்தியைப் பெற்றுக் கொண்ட நாள் முதல் தினமும் வாழ்நாள் முழுவதும் அல்குர்ஆனை ஓதிவருவது ஓர் அற்புதம் என்று தான் குறிப்பிட வேண்டும்.’

அதிக விற்பனையைப் பெற்ற ஆங்காங்கு அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிற பைபிள்களைவிட மனித இதயங்களில் அமர்ந்து விட்ட, உலகெங்கும் ஒலிக்கிற அல்குர்ஆன் அற்புதமானதுதான் என்பதில் ஐயமில்லை.

அபுல் அஃலா மவ்தூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இலங்கைப் பத்திரிகையாகிய ‘வழிகாட்டி’யில் 1961 ஆவது ஆண்டு பின்வரமாறு எழுதியிருந்தார்கள்: 

''என் அறியாமைக் காலத்தில் நான் ஏராளமான நூல்களைப் படித்துள்ளேன். புராதன புதிய தத்துவங்கள், அரசியல் விஞ்ஞானம், மனித வாழ்வு பற்றிய ஒரு நூல் நிலையமே எனது மூளைக்குள் அமைந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நூல்களைப் படித்து வந்தேன். ஆனால் என்று என் கண்களைத் திறந்து குர்ஆன் படிக்கத் துவங்கினேனோ அன்றுதான் அதற்கு முன்னர் படித்தவை அனைத்தும் குறையுள்ளவை என்பதை உணர்ந்து கொண்டேன்.

காண்ட் (1724-1804), ஹெகல் (1770-1831), கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் நீட்ஷே (1844-1900) போன்ற மிகப் பெரும் அறிஞர்கள் அனைவரும் இப்பொழுது பச்சிளம் குழந்தைகள் போன்று காட்சி தருகின்றனர். அவர்கள் மீது எனக்கு இப்பொழுது அனுதாபமே ஏற்படுகின்றது. பாவம்... வாழ்க்கை முழுவதும் எந்த இருட் குகைகளை ஒளிமயமாக்கவென இரவு பகலாகப் பாடுபட்டார்களோ – எந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவென பெரும் பெரும் நூல்களை எழுதிக் குவித்தார்களோ அவற்றைத் தீர்த்து உலகை ஒளிமயமாக்கும் கருத்துக்களை இவ்வேதப்பெருநூல் ஓரிரு வரிகளிலேயே வழங்கிவிடுகின்றது.

எல்லா வகையான பூட்டுகளையும் திறக்கும் திறவுகோலுக்கு ஆங்கிலத்தில் ‘மாஸ்டர் கீ’ என்பார்கள். அதுபோன்று வாழ்வின் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளாயினும் அவற்றைத் தீர்த்து வைத்து அமைதியைத் தரும் ‘மாஸ்டர் புக்’ குர்ஆன் என்று நான் கூறுவேன்.''  

(இலங்கையின் எஸ்.எம்.மன்ஸூர் அவர்கள் எழுதிய இலக்கியச் சோலையின் வெளியீடாகிய ‘உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகின்றது’ எனும் நூலிலிருந்து)

1 comment:

  1. 14 நூற்றாண்டுகளாகியும் இன்னும் முறியடிக்கப்படாத ஓர் சவால்:

    "இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்."
    (அல்குர்ஆன் : 2:23)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.