யார் இந்த அமீன்..?
-கலைவாதி கலீல்-
கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, புதிய நகர மண்டப கேட்பார் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி மற்றும் அஸீஸ் மன்றம் இணைந்து நடத்தும் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
காவியாபிமானி கலைவாதி கலீல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுகொள்ளவுள்ளதோடு நூல் ஆய்வினை காப்பியக்கோ டாக்டர். ஜின்னா சரீப்தீன் நிகழ்த்தவுள்ளார். இந் நிகழ்வை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
அமீன் அருங்காவியம் என்ற நூல், சனியன்று கொழும்பு 7 புதிய நகர மண்டபத்தில் வெளியிடப்படுகிறது. இந்நூலை ஆக்கியிருப்பவர் புலவர் பரம்பரையில் தோன்றிய இளங்கவிஞரான மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் ஆவார்.
அனஸ் ஏற்கனவே பல காப்பியங்கள் இயற்றியிருக்கிறார். ஊர் துறந்த காவியம், நாயகக்காவியம், அஷ்ரப் அமர காவியம், வாப்பு மரைக்கார் வழிக்காவியம், தங்கத்துரை காவியம், மஜீது காவியம் ஆகியன இவர் எழுதிய காவியங்களாகும். எல்லாமாக இவர் 22 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். சாதனைதான்! புகழ்பெற்ற அரசியல்வாதிகளான அஷ்ரப், தங்கத்துரை, மஜீது ஆகியோருக்குப் பின் அரசியலுக்கு அப்பால் சென்று சமூகத்தொண்டர்கள், சமுதாயச் சிற்பிகள், சமூக நலன் விரும்பிகளைப் பற்றிய காவிய வடிவிலான நூல்களின் வெள்ளோட்டமாகவே அமீன் அருங்காவியம் வெளியிடப்படுகிறது.
யார் இந்த அமீன்?
இந்த ஈழமணித் திருநாட்டிலே பல அமீன்கள் இருக்கின்றார்கள். நீதியரசர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட அமீன் என்ற அழகொளிர் நாமத்திலே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆயினும் பொது இடங்களில் அமீன் என்ற நாமம் உச்சரிக்கப்படும் போதெல்லாம் யாரவர். என்.எம். அமீனா? என்றுதான் கேட்பார்கள், இதை நான் நன்கறிவேன். அந்த அளவுக்கு இந்த நாட்டில் என்.எம்.அமீனின் பெயர் துலங்குவதற்கும் துலாம்பரமாவதற்கும் காரணங்கள் நிறையவே இருக்கின்றன.
முதலாவதாக என். எம். அமீன், இந்த நாட்டிலே வாழ்கின்ற மூத்த ஊடகவியலாளர் என்பதைக்கருத்தில் கொள்ள வேண்டும். அவர் கற்றது, பல்கலைக்கழகத்தில் விரும்பிப்பயின்றது, தொழிலாய் ஏற்றுக்கொண்டது. இற்றைவரை அழுத்தமாய் பற்றிப்பிடித்துக்கொண்டது ஊடகத்துறையைத்தான்.
பணம் புழங்கும் பல்வேறு தொழில்கள் இருந்தும் கூட ஊடகத்துறையையே தனது இலட்சியமாக வரித்துக்கொண்டார். அவரது எண்ணம், எழுத்து, ஏக்கம், இலட்சியம் , சொல், செயல் அனைத்தும் ஊடகமாகவே இருக்கின்றது. அந்த வகையில் அமீன் ஓர் ஊடகத்துறை ஜாம்பவானாக ஊடகத்துறையின் சாதனையாளராகத்திகழ்ந்து வருகின்றார். பல்கலைக்கழகப் பரீட்சை முடிவுகள் வெளியாகும் முன்னரே லேக்ஹவுஸில் இணைந்து ஓய்வு பெறும் வரை லேக்ஹவுஸிலேயே பணியாற்றி படிப்படியாக உயர்ந்து முகாமைத்துவ ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் கூட மற்றொரு நாளேடான நவமணியின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இது எதைக்காட்டுகிறதென்றால் வருமானத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் ஊடகத்துறைக்காக தனது உடல், பொருள், உழைப்பு இம்மூன்றையும் இழக்கத்தயார் இந்த அமீன் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.
உண்மையில் ஊடகப்பங்களிப்பை ஒரு வேள்வியாகவே நடாத்திவருகிறார் அமீன் எனில் அது மிகைப்பட்ட கூற்றல்ல. பெரும் பதவிகள் தேடிவந்த போதும் கூட அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு ஊடகமே என் உயிர்நாடி என்று வாழ்ந்து வருவதை நான் நன்கறிவேன். எனவே அமீனுக்காக ஒரு காவிய நூலை கவிஞர் அனஸ் யாத்தளிப்பது மிகப்பொருத்தமானதே.
அடுத்ததாக என்.எம். அமீனின் சமூகப்பணி அது சொல்லுந்தரமன்று! இந்நாட்டு மக்களுக்காக விசேடமாக முஸ்லிம் மக்களின் நலன் கருதியே அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறார். பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இவரது தலையீடு அபரிமிதமானது. அத்தோடு ஊடகவியலாளர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அதற்குப்பக்கபலமாக அமீனின் தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் நவமணி போன்ற பத்திரிகைகளையும் வானொலி தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றார்.
சுறுசுறுப்புடன் அங்குமிங்கும் ஓடியாடி பல இடங்களுக்கும் பயணம் செய்து ஏன் வெளிநாடுகளுக்கும் கூடச் சென்று முக்கிய பிரமுகர்களையும் அரசியல் தலைவர்களையும் கல்விமான்களையும் சந்தித்துக் கலந்துரையாடி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். பெரும்பாலான பிரிச்சினைகளில் வெற்றியும் கண்டுள்ளார். எனவே இந்த அமீன் அருங்காவியம் என்ற நூல் எழுதப்படத்தான் வேண்டும். அதனை கனகச்சிதமாகச் செய்திருக்கிறார். மூதூர் எம்.எம்.ஏ. அனஸ்.
நீண்ட நெடு நாட்களாகவே அமீனின் நெஞ்சத்தில் ஒரு மகத்தான எண்ணக்கரு இழையோடிக்கொண்டிருந்தது. அது ஒரு வெறியென்று கூறினால் கூடத்தப்பில்லை. ஆம்! முஸ்லிம்கள் கையில் ஒரு தமிழ் தினசரி வேண்டுமென்பதே அவ்வெண்ணக்கரு. அந்த வேணவா வீண் போகவில்லை. இன்று அது நிறைவேறியிருக்கிறது. இவையெல்லாம் அமீனின் நேர்மையான ஓயாத முயற்சிக்கு போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகளாகும்.
அனஸ் எழுதிய ‘அமீன் அருங்காவியம்” என்ற இந்த நூல் 107 பக்கங்களில் அழகிய முகப்போவியத்துடன் மிளிர்கின்றது. முன்னாள் ஆளுநர், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்காருக்கு நூல் சமர்பிக்கப்பட்டுள்ளது. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீனின் வாழ்த்துப்பாவும் முதுகவிஞர்; தாமரைத் தீவான், கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி, கவிஞர் மூதூர் எம்.ஏ பரீது, காவ்யாபிமானி கலைவாதி கலீல் ஆகியோரின் வாழ்த்துப்பாக்களும் மலருக்கு அணிசேர்க்கின்றன.
இறைஞ்சல், காப்பு, அவையடக்கம், நாடுநகர் வாழ்த்து, காவியம் என 160 பாடல்களும் அமீனருங்குறள் என்ற தலைப்பில் 28 குறள்களும் என்.எம். அமீன் வாழ்த்துப்பா என்ற மகுடத்தில் 15 பாடல்களும் அமீனரும் வெண்பா என்ற தலைப்பில் 30 வெண்பாக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும் அமீன் என்ற சொல் இடம்பெற்றுள்ளமை சிலாகிக்கத்தக்கது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், அணிந்துரையொன்றை வழங்கியுள்ளார். ஓரிடத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய விடயங்களைக் கையாள்வதிலே அமீன் இன்று முக்கிய பங்குவகிக்கின்றார். அரசியல்வாதிகளை விட மக்கள் சக்தியினை ஒன்றிணைப்பதில் அவருக்கு அதிக பங்கிருக்கின்றது. மக்கள் இயக்கத்தைக் கூட்டிணைப்பவராக நம் எல்லோருக்கும் நம்பிக்கை தரும் சக்தியாக “அமீன் நானா” திகழ்கிறார். எல்லோருக்கும் அவர் மீதுள்ள உரிமை காரணமாகவே பெரும்பாலும் அவர் எல்லோராலும் “அமீன்நாநா” என்று அழைக்கப்படுகிறார். அந்த உரிமையின் காரணமாகவே அனஸ் இன்று அவரை காவிய நாயகனாக்கியிருக்கிறார். என்.எம்.அமீன் பணிகள் என்றும் தொடரவேண்டும்.
தல்கஸ்பிட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்த அமீன் பல கிலோ மீற்றர் கால்நடையாக நடந்து பஸ்ஸேறிச் சென்று கல்விகற்ற ஊரின் முதலாவது பட்டதாரி. இவரது குடும்பம் பேரும் புகழும் மிக்க வைத்தியக்குடும்பமாக இருப்பினும் மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால், பல்வேறு அபிவிருத்திகளையும் இழந்து நின்றது. மாணவப் பருவத்திலேயே ‘தாஜ்மஹால் என்ற நலன்புரி அமைப்பொன்றை உருவாக்கி ஊரினை உயர்ச்சியாக்க பாடுபட்டார். அந்த தலைமைத்துவ ஆளுமை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பாமிஸ் போன்ற அமைப்புகளில் இணைந்து பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தார்.
தலைவர், உபதலைவர், செயலாளராக தனது மகத்தான பங்களிப்பை நல்கி வந்தார். நாட்டில் சக்திமிக்க அமைப்புக்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் தலைவராக நீண்ட காலம் பணியாற்ற முடிந்தமை அமீனது ஆளுமைகளையும் அவர் மீதுள்ள நம்பிக்கையையும் கோடிட்டு காட்டுகிறது. மீடியா போரத்தின் தலைவராக கடந்த இரு தசாப்தங்களாக பணியாற்றி வருகின்றமையும் SAFMA எனப்படும் தென்கிழக்காசியா ஊடக அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக அமீன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கின்றமையும் இவர் மீது ஊடக சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையின் உச்சம் எனலாம்.
பட்டங்கள் ,பொன்னாடை, புகழ் மாலைகளில் நாட்டம் இல்லாதவர் அமீன். ஆயினும் பல பட்டங்களின் சொந்தக்காரர். ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட அவரின் பெயரின் முன்னால் பொறித்துக்கொண்டது இல்லை. முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கிய ‘சௌத்துல் உம்மா’, அரசு வழங்கிய ‘தேசமான்ய”, கொழும்பு தமிழ்சங்கம், தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி ஆகியவை வழங்கிய மதிப்புமிக்க பட்டங்களைத் தன் பெயரின் முன் அடைமொழியாக்கிக் கொள்ளாமல் வெறும் என்.எம்.அமீனாக நிற்பவர்தான் அமீன். அந்த என்.எம்.அமீன் ஒன்றே அவரது நாமத்தை உலகமெங்கும் துலங்கச் செய்தது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். அமீனின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் தான். நிசாமுத்தீன் உடையார் மரியம் பீபி தம்பதியினரின் புத்திரரான அமீனுடைய மனைவி நஸ்லிமா ஓர் ஆசிரியை. டீ.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியில் தமிழ் பிரிவின் தலைவியாக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். பிள்ளைகளில் ஒருவர்; பீ.பீ.சி செய்தி சேவையின் இலங்கைக்கான நிருபராக கடமை புரிகிறார். மகள் லண்டனில் வசித்து வருகிறார். இளைய மகன் பல்கலைக்கழகத்தில் மாணவராகவுள்ளார். அமீனுடைய சகோதரர்கள் சிலர் ஆசிரியராக கடமை புரிகின்றார்கள். இவ்வாறு சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவது அமீனுக்கு இறைவன் கொடுத்த அருள் என்றே கருதவேண்டியுள்ளது. இத்தகைய தகவல்களை உள்ளடக்கிய நூல்தான் நாளை வெளியிடப்படும் அமீன் அருங்காவியம்.
நாட்டின் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், இந்தியப் பேரறிஞர்கள், இந்தியன் யூனியன் முஸ்லீக் அமைப்புகளின் தலைவர், மாநிலத்தலைவர், இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கின்றார்கள். விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் "அமீன் நானா".
ReplyDeleteஎனக்கும் நீங்கள் ஓர் ஆசான்.
எனது ஊடகத்துறை முன்னேற்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்!
ReplyDelete