அஷ்ரப் மரணம், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அறிவிப்பு
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பில நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பிலான இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கவில்லையென சுவடிகள் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரண அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யும் தகவல் அறியும் ஆணைக்குழு முன்னிலையில் சுவடிகள் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டிருந்தது.
அதனடிப்படையில், இது குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் விசாரணைகள் முடிவடையும் வரை எதனையும் கூற முடியாது எனவும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி, கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கி பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் அரநாயக்க பகுதியில் வெடித்துச் சிதறியதில் எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதன் பின்னர் தலைவர் அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 2001 ஆம் ஆண்டு தனி நபர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.கே.ஜி. வீரசேகரவின் தலைமையிலான ஆணைக்குழு புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 16 வருடங்களுக்கு மேலாக அந்த ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் எதுவும் பொதுமக்களுக்கு வௌயிடப்படவில்லை.
இந்த பின்புலத்திலேயே 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி வர்த்தமானியில் வௌியிடப்பட்ட தகவல் அறியும் சட்டத்தின் படி, ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தம்மிடம் இல்லையென சுவடிகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தகவல் அறியும் ஆணைக்குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment